பக்கம்:தம்பியர் இருவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தம்பியர் இருவர்

பரதனைப் பொறுத்தவரை அவ்வாறன்று. எவ்வளவு தான் இராமனுக்குத் தீமை புரியினும் கைகேயியிடம் பரதன் காட்டும் வணக்கத்தைக்காட்டிலும் மிகுதியாகக் குகன் காட்டுகிறான். எனில், அது குகனுடைய மதிப்பையே மிகுதிப்படுத்திக் காட்டுகிறது. இக்கருத்தையே மனத்துட் கொண்டு போலும் கவிஞன்,

'என்னக் கேட்டுஅவ் இரக்கம்இ லாளையும் தன்கற் கையின் வணங்கினன் தாய்என’’

(கம்பன்-2372)

என்று கூறுகிறான்!

பரதன், குகன் என்ற இருவருமே இராமனுடைய தம்பியர். ஒருவன் பிறப்பாலேயே தம்பியாய்ப் பிறந்தான். மற்றவன் பிறவாமலும் தம்பி ஆயினான். இராமனைப் பொறுத்த மட்டில் அவனால் தம்பியாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்குப் பிறப்பு ஒரு பெருங்காரணமாகவே கருதப்பட வில்லை. குகனைத் தம்பி என்று கூறுகிறானே தவிர, உடன் பிறவாவிடினும் நீ தம்பிதான், என்று கூறவில்லை. இவ்வாறு கூறாதது குகனுடைய பிறப்பைப் பற்றி இராமன் கவலை கொன்ளவில்லை என்பதையே அறிவுறுத்துகிறது. ஒருவன் உடன் பிறந்த தம்பி; மற்றவன் உடன் பிறவாத் தம்பி. எனவே, தம்பியர் என்ற முறையில் இருவரும் ஒன்று தான்.

இருவரும் இராமனிடத்துப் பேரன்பு பூண்டவர். இருவ ருடைய அன்பும் மிகவும் ஆழமானது. ஆழ்ந்தும் பரந்தும் செல்லும் கங்கை ஆற்று வெள்ளத்தின் இயல்பே இவர் களுடைய அன்பின் இயல்புமாகும். ஆரவாரத்திற்கோ, படபடப்பிற்கோ இங்கு இடமில்லை. ஆற்றுள் இறங்கி மூழ்கிப் பார்த்தால் ஒழிய ஆற்றின் ஆழம் தெரியாதவாறு போல, இவர்களுடைய அன்பை அனுபவித்துப் பார்த்தால் ஒழிய, அதன் சிறப்பை உணர முடியாது. இவர்களுடைய அன்பில் தன்னலமோ, அகங்காரமோ எதுவும் இல்லை.