பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 - தம்பிரான் தோழர் குணம் மிக்கவர்களே உலகிற்கும் தமக்கும் நன்மையைத் தேடுபவர்கள். இக்குணம் மிகுதி ஆக ஆக ஏனைய இரண்டும் மங்கி விடும். இறைவனுடைய நினைவாகவே இருக்கும் இயல் புடையவர்களிடம் சத்துவ குணமே மீதுர்ந்து நிற்கும். சுந்தரர் திருக்கூத்தன் திருக்காட்சியில் கண்ணையும் சிந்தை யையும் பறிகொடுத்து நிற்கையில் சிறிதளவு நின்ற தாமத இராசத குணங்களும் ஒடுங்கிப் போகச் சத்துவ குணம் மட்டிலும் ஒளிர்கின்றது. இறைவன் மயமாகக் கண்ணும் கருத்தும் அமைய அவர் உள்ளம் சத்துவ குணம் என்னும் மணத்தை வீசி யலர்கின்றது. தனிப் பெருங்கூத்தின், வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். இந்த நிலையே சமாதி நிலைக்கு அழைத்துச் செல்வது. நம்பியாரூரர் கண்ணைத் திறந்தபடியே சமாதி நிலையில் இருக்கின்றார். இந்துவாழ் சடையான் ஆனந்தக் கூத்தைக் கண்டு நிற்கும் ஆருரரின் புறக்கண்ணாகிய வாயிலின் வழியாக ஆனந்தக் கூத்தன் உள் புகுகின்றான்: அகக்கண்ணிலும் புகுகின்றான். அங்குள்ள நான்கு வாயில் களிலும் சித்தம் என்னும் வாயிலே திறந்திருக்கின்றது. அதன் வழியாகக் கூத்தும் புகும்பொழுது அவ்வறையில் பிறமணங்க ளெல்லாம்/அகன்றொழியச் சத்துவகுண மணமே நிரம்பி நிற்கின்றது. இந்நிலையில் நாவலூரர் கண் திறந்தபடி யிலிருந்தும் காண்கின்றார் இல்லை; சித்தமும் செயற்பட வில்லை; சத்துவ குணமும் தலைக்காட்டவில்லை. அவர் இறைவன் அருட்கூடத்தில் மலர்ந்த பேரின்ப வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றார். இவ்வாறு ஆன்மா ஒருமுறை மலர்ந்து விட்டால் அஃது என்றும் வாடாது. இந்த அநுபவத்திை நம்பியாரூரர் பெறுகின்றார். இதைச் சேக்கிழார் பெருமான் கற்பனையில் கண்டு நமக்குத் தருகின்றார்.