பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32



'அதற்குத்தான் உலோகக் கண்டுபிடிப்பானை அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறாரே!” என்றாள் கண்ணகி.

"சரி, இப்பொழுது எல்லாம் விளங்கிவிட்டது. இனி கடப்பாரையே கதி’ என்றான் சுந்தரம்.

ஜின்கா ஏதோ தீர்ப்புச் சொல்லுவதுபோல ஒருவரை மாற்றி ஒருவரை உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தது. பிறகு, தனது ஆமோதிப்பைத் தெரிவிப்பது போல் ஜிங்ஜிங்கென்று குதிக்கலாயிற்று.

இருட்டினவுடன் ஒவ்வோர் இரவும் விரைவில் மூவரும் உணவு முடித்துக்கொண்டு மாசிலா நாத சுவாமி ஆலயம் சென்று, தமது ஆராய்ச்சியை முழுமூச்சுடன் தொடங்கலாயினர். கடப்பாரை யின் ஒலி திப்திப் என்று ஒலிக்கலாயிற்று.

கண்ணகி இயல்பாகவே விரைவில் களைத்துப் போய்விடுவாள். உடனே தங்கமணி உதவிக்கு வருவான். இப்படியாக ஒரு வாரம் சென்றுவிட்டது. அங்கே உள்ள மண் இறுகிக் கட்டியாக இருந்ததால் வேலையும் சுலபமாக இருக்கவில்லை.

வள்ளிநாயகிக்கு ஒன்றும் புரியவேயில்லை. “எதற்காக இரவிலே போகிறார்கள்? ஒன்றும் விளங்கவேயில்லையே! இரவில் நேரங்கழித்து வந்து படுக்கிறார்கள்' என்று தன் கணவர் வடிவேலைப் பார்த்துக் கேட்டாள். வழக்கமாக ஒவ்வொரு நாளும் மாலையில் அவர்கள் உலாவப் போவதுண்டு.