பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XII

எந்தவித குமுத பந்தாவும் இல்லாமல் என்னிடம், அன்று முதல் இன்றுவரை, இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் பெருந்தோழர். அனுமானுக்குத் தன் பலம் தெரியாததுபோல் இவருக்கும் தனது இலக்கிய பலம் தெரியவில்லை. இவரது பாத்திரங்களான அப்புசாமியும், சீதாப் பாட்டியும் இன்றைய இலக்கிய தரகர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், அவை இந்த இருட்டடிப்பை கிழித்துக்கொண்டு வீறுமிக்க வெளிச்சமாய் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வகை இலக்கியத்தில், தனித்துவம் மிக்க படைப்பாளி ஜ.ரா. கந்தரேசன் அவர்கள். இவரது முன்னுரை எனக்கு ஒரு இலக்கியக் கெளரவம்.

பெரியவர். திருநாவுக்கரசு அவர்களிடம், அவரது அருமை மகன் ராமு அவர்கள் மூலம் இந்த பழைய சிறுகதைகளை வெளியிட வேண்டும் என்று 'தூது'விட்டேன். அவரும், உடனடியாகச் சம்மதித்தார். நவீனக் கதைகளே, வேலையில்லாத் திண்டாடத்தில் தவிக்கும்போது, இந்தப் பழங்கதைகளை, பொருட் செலவைப் பற்றிக் கவலைப்படாது வெளியிட அவர் முன்வந்தமைக்கு, ஆயிரம் நன்றிகள் சொன்னாலும், அவை போதா.

இறுதியாக...

எப்போதும் எழுதும் வாசகப் பெருமக்கள், எனது அந்தக் கால சிறுகதைத் தொகுப்புகளில் எப்படியோ விடுபட்டுப்போன பழங்கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, காலத்திற்கு அடக்கமா அல்லது பொருத்தமா என்பது குறித்து ஒரு வரி எழுதினால் நன்றியுடையேன்.