பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XI


ஒத்துபோக முடியாது என்ற மனோதத்துவத்தைப் படித்தறிந்து எழுதிய கதை.

ஒரு காதல் கடிதம் உண்மையிலேயே நடந்தது. அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், பதறிய பதற்றமும் என் கண்களைச் சில சமயம் குத்துகின்றன. உண்மையான காதலர்களுக்கு இந்தக் கதையின் தாக்கம் புரியும்.

ஒரே பகலுக்குள் - எனது அலுவலக தலைவர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து எழுதப்பட்ட கதை. இதில் வரும் வாழைப்பழ வாங்கல் உண்மையிலயே நடந்தது.ஆனாலும், அவரது அடாவடிதனத்திற்குத் தண்டனை கிடைக்கவில்லை. நான்தான் மென்மையாகக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும், இப்படிப் பட்டவர்களுக்கு இத்தகைய கர்வ பங்கங்கள் ஏற்படுவதுண்டு.

சண்டைக் குமிழிகள் பாணி சண்டைகள், இன்று பெரும்பாலும் கிராமங்களில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருகி வருகின்றன. இந்தக் கதையை மண் வாசனைக்காக மட்டும் எழுதவில்லை. அடித்தள மக்கள் எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்தில் அதை மறந்து விடுகிறார்கள். இந்தச் சண்டைகள் இவர்களுக்கு, தத்தம் மனோபாரங்களை இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளாகவே உள்ளன. இவர்களுக்கு, சண்டைக் காலத்தில் மட்டும், எதிர்தரப்பினர் சுமைதாங்கிகள். அது முடிந்ததும் ஒருவருக்கொருவர் தாங்கிக் கொள்வார்கள்.

இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை கொடுத்திருக்கும் முதுபெரும் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள், எனது எழுத்துலக வழிகாட்டி. அந்தக் காலத்தில், குமுதத்தில், எனது கதைகள் பெரும்பாலும் வாரம்தோறும் வருவதற்கு காரணமாக இருந்தவர்.

'வீட்டைக் கட்டிப் பார்', 'வாழ்க்கை ஒரு சமுத்திரம் ஆகிய குமுதக் கட்டுரைகள் இன்றுகூட பேசப்படுகின்றன என்றால், அதற்கு ஜ.ரா.சுந்தரேசன் அவர்களே காரணம். அந்த அளவிற்கு உட்தலைப்புகளோடு, வெளியிட்டார்.