பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தானாடி... சதையாடி...


  ராசம்மா, அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்த வேளை.அவள் அண்ணண் வைத்திலிங்கமும், அண்ணி வடிவம்மாவும், மல்லுக்காகச் சொற்களை ஆயுதங்களாய் வீசிக்கொண்டிருந்த சமயம் மாடுகளுக்காகத் தொட்டியில் தவிட்டை அள்ளிப்போட்டு, ஒரு பனை மட்டையால் குடைந்துக் கொண்டிருந்த தம்பி மயில்வாகனன், உலக்கையில் நெல்குத்திக்கொண்டிருந்த தங்கை ராணியைத் திட்டிக் கொண்டிருந்த நேரம்.
 சித்திரசேனன், தோளிலே தூக்குப் பை தொங்க, ஒரு கை டிரங்க் பெட்டியைப் பிடிக்க, உள்ளே வந்தான். ராசம்மா, அவன் பெட்டியை வாங்கவரவில்லை. குறைந்தபட்சம்,கணவனின் வரவை அங்கீகரிக்கும் வகையில் எழுந்திருக்ககூட இல்லை.
வீட்டின் கொல்லைப்புறத்தில் குதிபோட்டுக்கொண்டு இருந்த எட்டு வயது மகனும், ஆறு வயது மகளும், அப்பாவைப் பார்த்து, துள்ளிக் குதித்தபடி உள்ளே தாவியபோது, ராசம்மா, அவர்களின் கைகளைப் பிடித்து, தன்பக்கம் இழுத்துக்கொண்டாள். இரு குழந்தைகளையும் இரு பக்கமும் அணைத்தபடியே கவரிலே தலைபோட்டு, அவனைப் பார்க்காதது மாதிரி பார்த்தாள்.
 அவனை வாங்க மாப்பிள்ளை' என்று அதட்டலாகக் கூப்பிட்டாலும், அதில் அன்பை வைக்கும் ராசம்மாவின் அண்ணன் வைத்தியலிங்கம் கூட, 'உம்' என்று உருமினான். அதற்கு வாங்க என்று அர்த்தமா அல்லது 'போய்யா' என்ற பொருளா என்பது