பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 சு. சமுத்திரம்


புரியாமல், சித்திரசேனன் குழம்பினான். அதற்குமேல், அடியெடுத்து வைக்க முடியாமல் நின்றான்.

 அந்தச் சமயம் பார்த்து, மைத்துனி ராணியின் உலக்கைச் சத்தம் பயமூட்டும்படியும், பயமுறுத்தும் படியும் ஒலித்தது. அவள் தன்னையே தலைகீழாகப் பிடித்து, உரலில் ஓங்கி இடிப்பதுபோல், சித்திரசேனன், தனது தலையைக் கையால் பிடித்துக் கொண்டான். இப்படி எல்லோரும், அவனை ஏளனமாகவும், இளக்காரமாகவும் பார்த்தபோது -
வைத்தியலிங்கத்தின் வடிவம்மா, கையில் ஒட்டிக்கொண்ட அரைகுறையான மஞ்சள்மசாலா கைகளோடு ஓடிவந்து, அவன் கையில் இருந்த டிரங் பெட்டியை ஒரு கையால் வாங்கி, தரையில் வைத்தபடியே, இன்னொருகையால் அவன் தூக்குப்பையை வாங்கி, அதிலேயே தனது மசாலா கையைத் துடைத்தபடி, எல்லோரையும் திட்டினாள்.
 'அண்ணாச்சி ஆறுமாசத்துக்குப் பிறவு மெட்ராஸ்ல இருந்து அரையாளா வாராவ. அவியகிட்ட வான்னு கேட்க வாய் வரமாட்டக்கோ? இதுதான் ஒங்க குடும்ப லட்சணம். நீங்க வாங்கண்ணாச்சி. யார் பேசினா என்ன...? யார் பேசாட்டா என்ன..? நானிருக்கேன்.”
 சித்திரசேனனுக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. எல்லோரையும் நோட்டம்போட்டுப்பார்த்தான்.அவர்கள் என்னமோ, அவனை உள்ளே வரவிட்டதே பெரியது என்பது மாதிரி, அவனைப் பார்க்காமலே, அவன் அங்கே இல்லை என்பதுபோல் இருந்தார்கள்.
 சித்திரசேனன், மனைவியின் பிடியை மீறி முண்டியடித்த, தனது குழந்தைகளைக் குறிப்பாகப் பார்த்தபோது, ராசம்மா விம்மினாள். இரண்டு கைகளிலும் பிடித்து வைத்திருந்த மகனையும், மகளையும் சித்திரசேனன் பக்கமாகத் தள்ளிவிட்டபடியே, "போங்க. ஒப்பாகிட்டே, நீங்க பட்டபாட்டைச் சொல்லுங்க...” என்று