பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிக்கொடியும் - மனிதக்கொடியும் ஜ.ரா. சுந்தரேசன்

(பாக்கியம் ராமசாமி)


சமுத்திரம் அவர்களின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதும் காரணத்தால், எனக்கும் இலக்கியவாதி என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது என்று, நான் கர்வம் கொள்ளவில்லை. அல்லது சுரண்டல் லாட்டிரி மாதிரி, இது ஒரு சான்ஸ் என்றும் எடைபோட்டுக் கொள்ளவில்லை.

சாகித்திய அகாடமியால் கெளரவிக்கப்பட்ட நாவல் ஆசிரியரின், சிறுகதைப் படைப்பாளியின், சட்டயர் என்னும் சாட்டையால் சமூக அநீதிகளை போலீஸ் அடி போல் உள்காயம் கொடுத்துச் சாடும் இலக்கியத் தோழரின் கதைகளைத் தொகுப்பாகப் படித்து, அவரது பரிமாணங்களின் வீச்சைக் காணமுடிந்த மகிழ்ச்சிக்கு ஆளானேன் என்பதே உண்மை.

இந்தத் தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் வெளிவந்த இலக்கியப் பத்திரிகைகளை நான் படிக்கச் சந்தர்ப்பம் இல்லாததால், அவற்றில் வெளிவந்த சமுத்திரத்தின் கதைகளை நான் அனுபவிக்க முடியாமல் இருந்தது. ஆனால் மேற்படி கதைகளில் பல, இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தனதாக்கிக் கொள்ளப் போகிறது.