பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தாயை மறந்து விட்டேனோ என்றுதானே நீங்கள் முகம் சுளிக்கிறீர்கள்? அதுதான் கிடையவே கிடையாது. மண் குவித்து ‘ஹரிநமோத்துச் சிந்தம்’ எழுதிப் பழகிய முந்நாள் தொட்டு, அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பழகி வருகின்ற இன்றைய தேதி வரைக்கும், என் நலத்தில், குறிப் பாக என் தூக்கத்தில் அக்கரையும் அனுதாபமும் பூண்டவள் என் அன்னை. முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் சுமந்து ஈன்றவள் இதுகாறும் என்னைத் தன்னுடைய கண்களுக்குள் வைத்து இமைகளால் மூடித்தான் வளர்த்து வருகின்றாள். எனவே, அம்மாவின் உறக்கத்தையும் சேர்த்து நான் தூங்குவதில் என்றென்றும் கண்ணும் கருத்துமாக இருப்பவன் நான்!

சோதனைகள் யாவருக்கும் பொது அல்லவா? அம்மாவின் இத்தகைய செல்லத்துக்கு அப்பாதான் அடிக்கொரு தரம் சோதனை போடுவது வழக்கம். பள்ளிக்கூடம் வைப்பதை முகாந்தரமாக்கி, நூறு இருநூறு செலவழித்து, பள்ளிப் பையன்களுக்கு ‘வெல்லரிசி-அவல்-சர்க்கரை’ செய்து கொடுத்து என்னைப் பள்ளியிலே சேர்த்த கவலையில், என்னுடைய அருமை மிருந்த தூக்கத்திற்கு முட்டுக் கட்டை போடுவதில் ரொம்பவும் முனைப்பாக இருந்தார் அவர். பொழுது விடிவதற்கு முன்னதாகவே, விடிந்து விட்டதாக பச்சைப் பொய் ஒன்றைச் செலவழித்த வண்ணம் என்னைத் துயிலெழுப்புவார் அன்புத் தந்தை. ‘ஆராரோ...