பக்கம்:தாய்மை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. தாய்மை

கொண்ட வள்ளல் தன்மையை வண்டுக்கு உணர்த்தும் அதே வேளையில், தன்னினும் சிறந்த தொண்டர்களை யெல்லாம் எவ்வெவ்வாறு சோதித்து ஆட்கொண்டார் என்பதையும் உணர்த்துகிறார். அத்தகைய உயர் அடியவர் தொகை நடுவுள் தான் ஒருவன் இல்லையாயினும் தானே வந்து ஆட்கொண்ட வள்ளல் பெருமான் தாழ்ந்த வண்டினையும் ஆட்கொள்வான் என உணர்த்தி, அதை ஆற்றுப்படுத்துகிறார்.

அடியவர் வரிசையினை எண்ணும்போது முதலில் நிற்பவர் கண்ணப்பர்தாம். காட்டில் வேடுவராகி, கலை ஞானம் அறியாராய் வில்லும் வாளும் கொண்டு விலங்கு களை வேட்டையாடும் அவர் நிலையினைக் கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர் என்கிறார் சுந்தரர். ஆம்! உண்மையே. கல்லாகக் கருதிப் பல ஆண்டுகள் பூசை செய்த அந்தணருக்குக் கல்லல்ல கடவுளே என்று கலை நலத்தால் கண்டு காட்டிய கண்ணப்பர்-ஆறே நாட்களில் ஆண்டவனை அடைந்த கண்ணப்பர் பிற எல்லா அடியவர் களைக் காட்டிலும் உயர்ந்தவர்தாமே. அத்தகைய உயர்ந்த அடியவரை ஆட்கொண்ட இறைவன் தன்னையும் ஆட்கொண்டருளிய தன்மையினை-மேலும் உலகில் ஆற்ற வேண்டிய செயல்களைச்செய்யுமாறு பணித்துப் பின்னைத் ‘தன்னிடம் வா’ என்று அன்று குருந்த மரத்தடியில் கூறிய கருணையினை அவர் உள்ளம் நினைத்து, அதை வண்டுக்கு விளக்கி, அத்தகைய வள்ளல் உனக்கும் நல்லதேன் தருவான் என ஆற்றுப்படுத்துகிறார். இவ்வாறு தன் நிலையினையும் தலைவன் உயர்வினையும் அவன் தனக்கு வந்து அருளிய நிலையினையும் பல தேவர்கள் தேடித்தேடி அலுக்க, அவன் தன்னைத் தேடித் தேடி வந்து அடித்தடித்து அக்காரம் தீட்டிய நிலையினை இப்பகுதியின் பிற இடங்களிலும் பிறபகுதிகளிலும் அடிகளார் அடிக்கடி சுட்டிக்காட்டுவார் என்பதைத் திருவாசகத்தை ஒரு முறை பயின்றவரும் நன்கு அறிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/60&oldid=684847" இலிருந்து மீள்விக்கப்பட்டது