பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

101


“வணக்கம், அம்மா! என்னைத் தெரியவில்லையா?” என்று ஒரு பழைய நண்பனைப்போல் உரிமையோடு கேட்டான்.

“நீங்களா?” என்று காரணகாரியம் தெரியாது திடீரென எழுந்த உவப்போடு கேட்டாள் பெலகேயா; “இகோர் இவானவிச்சா?”

“அவனேதான்!” என்று பதிலளித்துவிட்டு அவன் தேவாலயப் பாடகர்களின் முடியைப்போல் வளர்ந்து இருந்த அவனது நீண்ட மயிர் நிறைந்த தலையைத் தாழ்த்தி வணங்கினான். அவனது முகத்தில் புன்னகை தவழ்ந்தது; அவனது சிறிய சாம்பல் நிறக் கண்கள் தாயைப் பரிவுடன் நோக்கின. அவன் ஒரு தேநீர்ப் பாத்திரத்தைப்போல் உருண்டையாகவும் சிறிதாகவும் தடித்த கழுத்தும் குட்டைக் கைகளும் உடையவனாகவும் இருந்தான். அவனது முகம் பிரகாசித்தது: நெஞ்சுக்குள்ளே ஏதோ கரகரத்து உறுமுவதுபோல அவன் ஓசையெழும்பச் சுவாசித்தான்.

“நீங்கள் அறைக்குள் போங்கள். நான் உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்” என்றாள் தாய்.

“நாங்கள் ஒன்று கேட்க வந்திருக்கிறோம்” என்ற அக்கறையோடு சொல்லிக்கொண்டே, புருவங்களுக்கு மேலாக அவளை ஒரு பார்வை பார்த்தான் சமோய்லவ்.

இகோர் இவானவிச் அடுத்த அறைக்குள் சென்று அங்கிருந்தே பேசத் தொடங்கினான்.

“இன்று காலை நிகலாய் இவானவிச்–அவளை உங்களுக்குத் தெரியுமல்லவா–அவன் சிறையிலிருந்து இன்று காலையில் வெளிவந்துவிட்டான், அம்மா....” என்று ஆரம்பித்தான் அவன்.

“அவன் சிறையிலிருந்ததே எனக்குத் தெரியாது” என்றாள் தாய்.

“இரண்டு மாதமும் பதினொரு நாளும் ஆகிறது. அவன் அங்கே அந்த ஹஹோலைப் பார்த்தானாம். ஹஹோல் உங்களுக்குத் தன் வந்தனத்தைத் தெரிவிக்கச் சொன்னானாம். பாவெலும் சொல்லியனுப்பியிருக்கிறான். நீங்கள் வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாதென்று சொல்லியிருக்கிறான். அவன் தேர்ந்தெடுத்த மார்க்கத்தை வேறு யார் யார் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்குச் சிறையிலே சில காலம் ஓய்வுபெறும் ஆனந்தம் கிட்டும் என்பதையும் அவன் உங்களிடம் சொல்லச் சொல்லியிருக்கிறான். நம்முடைய முதலாளிகளின் தயவால் ஆனந்தம் கிட்டுவது நிச்சயமாம்! சரி நான் வந்த விஷயத்தைக் கவனிக்கிறேன், அம்மா. நேற்று மொத்தம் எத்தனை பேரைக் கைது செய்தார்கள், தெரியுமா?”