பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

மக்சீம் கார்க்கி


நிறைந்த இளைஞர்களின் கலகலப்பு நிறைந்திருந்தது. அந்த நன்மைக்கெல்லாம், எனினும் ஆபத்தான வாழ்க்கைக்கெல்லாம் தூண்டுகோலாயிருந்த தன் மகனது முகத்தையே அவளுக்குப் பார்த்துப் பார்த்துப் பழக்கமாகியிருந்தது. இன்றோ, அவன் போய்விட்டான் அவன் மட்டுமா? எல்லாமே போய்விட்டன!

அன்றைய பகலும், அந்த நாள் இரவும் மெதுவாகக் கழிந்தன. இதையும் விட மெதுவாக நகர்ந்தது அடுத்த நாள். யாராவது வருவார்கள் என்று அவள் எதிர்பார்த்தாள்; யாருமே வரவில்லை. மாலை வந்தது. கருக்கிருளும் சூழ்ந்தது. குளிர் படிந்த மழை பெருமூச்செறிந்து கொண்டே சுவர்களிலும் சலசலத்துப் பெய்தது: புகைக்கூண்டு வழியாக ஊதக்காற்று ஊளையிட்டு அலறிற்று. தரைக்கடியிலே ஏதோ ஓடுவது போலிருந்தது. கூரைச் சரிவிலிருந்து மழைத் துளிகள் கொட்டின: அவை சொட்டிச் சொட்டி விழும் ஓசையும், கடிகாரத்தின் பெண்டுல ஓசையும் ஒன்றோடு ஒன்றாய் முழங்கிக் கலந்து ஒலித்தன; அந்த வீடு முழுவதுமே லேசாகத் தலையசைத்து ஆடுவதுபோலத் தோன்றியது. மனத்திலே கவிந்திருந்த சோக உணர்ச்சியால் சுற்றுப்புறத்தில் இருந்து பழகிப்போன பொருள்கள் அனைத்தும் உயிரற்றனவாகவும். அன்னியமாகவும் தோற்றம் அளித்தன.

ஜன்னல் கதவில் யாரோ தட்டுகின்ற ஓசை கேட்டது. ஒரு தடவை, இரண்டு தடவை. அவளுக்கு அந்த மாதிரி ஓசை பழகிப்போனதுதான். எனவே அவள் அதைக் கேட்டுப் பயப்படுவதில்லை. ஆனால் அன்று அந்த ஓசையைக் கேட்டதும் இதயத்தில் இன்பவேதனை சில்லிட்டுக் குளிர, அவள் துள்ளி எழுந்தாள். தெளிவற்ற நம்பிக்கைகள் அவளை உடனே எழுந்து நிற்கச் செய்தன. தன் தோள் மீது ஒரு போர்வையை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் கதவைத் திறந்தாள்.

சமோய்லவ் உள்ளே வந்தான்; அவனைத் தொடர்ந்து இன்னொருவனும் வந்தான். அவன் தன் தொப்பியை நெற்றிவரையிலும் இழுத்துவிட்டிருந்தான்; கோட்டுக் காலரை மேல்நோக்கித் திருப்பி மடித்துக் கழுத்தையும் முகத்தையும் மூடியிருந்தான்.

“உங்களை எழுப்பிவிட்டோமா நாங்கள்” என்று வணக்கம்கூடச் சொல்லாமல் கேட்டான் சமோய்லவ்: வழக்கத்துக்கு மாறாக, அன்று அவனது குரலில் ஆர்வமும் சோகமும் கலந்து தொனித்தன.

“நான் தூங்கவே இல்லை” என்று பதிலளித்துவிட்டு, அவர்களது பேச்சையே எதிர்நோக்கிக்கொண்டிருந்தாள்.

சமோய்லவின் கூட்டாளி தனது தொப்பியை அகற்றிவிட்டு, கரகரத்துச் சுவாசித்தான்; தனது தடித்த கரத்தை நீட்டினான்.