பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

99


“எதிர்பார்த்த விஷயம்தான்! என்று கூறி லேசாகச் சிரித்தான்.: “அவர்கள் என் வீட்டையும்தான் சோதனை போட்டார்கள்: ஒன்றும் பாக்கியில்லை. எல்லாவற்றையும் உருட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். என்னை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்: ஆனால், எனக்கு அவை ஒன்றும் உறைக்கவே இல்லை. அவர்கள் பாவெலைக் கொண்டுபோய் விட்டார்கள். இல்லையா? அந்த மானேஜர் கண்ணைக் காட்டவேண்டியது; போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது; அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டுபோய் விடவேண்டியது! அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள். ஒருவன் கொம்பைப் பிடித்துக்கொள்கிறான். மற்றவன் பால் கறக்கிறான். இவ்வாறு மக்களைக் கறந்து தீர்க்கிறார்கள்.”

“பாவெலுக்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும்!” என்று எழுந்துநின்று சத்தமிட்டாள் தாய்; “எல்லாருக்காகவும் தானே அவன் வேலை செய்தான்.”

“யார் செய்கிறது?”

“ஒவ்வொருவரும்!”

“ஹும், நீ அப்படியா நினைக்கிறாய்? உஹும்! அது மட்டும் நடக்காத காரியம்!”

சிரித்துக்கொண்டே அவன் வெளியே நழுவிவிட்டான். அவனது நம்பிக்கையற்ற வார்த்தைகள் அவளது பரிதாப நிலையை மேலும் மோசமாக்கியது.

“அவனை அவர்கள் அடித்தால், சித்ரவதை செய்தால்.”

தன் மகனது உடம்பெல்லாம் அடிபட்டுப் பிய்ந்துபோய், இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் காட்சியைக் கற்பனை பண்ணிப் பார்த்தாள்; அதை நினைத்தவுடனேயே அவளது உள்ளத்தில் ஒரு நடுக்கமும் பயமும் குளிர்ந்தோடிக் குத்தியது. அவளது கண்கள் குத்தலெடுத்தன.

அன்று முழுதும் அவள் அடுப்பு மூட்டவில்லை; சாப்பிடவுமில்லை. தேநீர்கூட அருந்தவில்லை. இருட்டி வெகுநேரம் கழிந்த பிறகுதான் ஒரு துண்டு ரொட்டியைக் கடித்துத் தின்றாள். அன்றிரவு அவள் படுக்கச் சென்றபோது அவளது வாழ்க்கையில் இதுவரை இந்தமாதிரியான சூனிய உணர்ச்சியும் தனிமை உணர்ச்சியும் என்றுமே இருந்ததில்லை என்பதை அவள் உணர்ந்தாள். கடந்த சில வருஷங்களாகவே அவள் ஏதோ ஒரு முக்கியமான, நன்மைதரும் விஷயத்தையே எப்போதும் எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பழகிப்போய்விட்டாள். அவளைச் சுற்றிலும் உற்சாகமும் உவகையும்