பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

119


சிந்திக்கவில்லை. இப்போது அவனது அன்பைக் கவர்ந்திருப்பது தாயல்ல; வேறொருத்தி.... கட்டுலைந்து சிதறிட்போன மேகத்திரள்களைப் போல வேதனை தரும் சிந்தனைகள் அவளைச் சூழ்ந்தன. அவளது ஆத்மாவையே இருளில் மூழ்கடித்தன.

“அம்மா, நீங்கள் களைத்துப் போயிருக்கிறீர்கள். சரி, நாம் படுக்கலாம்” என்று இகோர் புன்னகை செய்துகொண்டே சொன்னான்.

அவனிடம் விடைபெற்றுக்கொண்டு, சமையலறையை நோக்கி ஜாக்கிரதையாக வந்தான். அவளது இதயம் முழுதிலும் நமைச்சல் தரும் கசப்புணர்ச்சி நிரம்பியிருந்தது.

மறுநாள் காலையில் சாப்பிடும்போது இகோர் சொன்னான்:

“அவர்கள் உங்களைப் பிடித்து, இந்தத் துவேஷப் பிரசுரங்கள் எல்லாம் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?”

“அது ஒன்றும் நீங்கள் கேட்டுத் தெரிய வேண்டியதில்லை என்பேன்” என்றாள்.

“அப்படிச் சொன்னால் அவர்கள் அதை ஒப்புக்கொண்டு உங்களை விட்டுவிட மாட்டார்கள்” என்றான் இகோர். “கேட்டுத் தெரிய வேண்டியதுதான் தங்கள் வேலை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே உங்களை அப்படியும் இப்படியும் புரட்டிப் புரட்டிக் கேள்விகேட்டு, உண்மையை உங்கள் வாயிலிருந்து பிடுங்கப் பார்ப்பார்கள்.”

“எப்படிக் கேட்டாலும் நான் சொல்லவே மாட்டேன்.”

“சிறையில் போடுவார்கள்.”

“போடட்டுமே! அதற்காவது நான் லாயக்கு என்றால் கடவுளுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள். “என்னை யார் விரும்புகிறார்கள்? ஒருவருமில்லை. அவர்கள் என்னைச் சித்ரவதை செய்யமாட்டார்கள். இல்லையா?”

“ஊம்!” என்று அவளைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே சொன்னான் இகோர். “சித்ரவதை செய்யமாட்டார்கள், ஆனால், தங்கள் நலனைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் அதுதான் கெட்டிக்காரத்தனம்.”

“ஆமாம். அதை நீங்கள் சொல்லித்தான் அப்பா, எனக்குத் தெரிய வேண்டும்” என்று சிறு சிரிப்புடன் சொன்னாள் தாய்.