பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

மக்சீம் கார்க்கி


அவன் தன் முன்னிருந்த தேநீரை ஒரே மடக்கில் பருகினான்; பிறகு தன் கதையை மேலும் தொடர்ந்தான். அவனது சிறைவாச காலத்தின் புள்ளிவிவரங்கள், நாடு கடத்தட்பட்டு சைபீரியாவில் பட்ட பசிக்கொடுமை, சிறையிலே விழுந்த அடி உதைகள், எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான். அவள் அவனையே பார்த்தாள்; துன்பமும் துயரமுமே நிறைந்த சோகவாழ்வுச் சித்திரத்தை அவன் அமைதியோடு எளிதாக நினைவு கூர்ந்து சொல்லுகின்ற முறையைக் கண்டு அவள் அதிசயித்தாள்....

“சரி. நாம் நம் விஷயத்துக்கு வருவோம்.”

அவனது குரல் மாறிவிட்டது; முகமும் முன்னைவிட உக்கிரம் அடைந்தது. அவள் எப்படித் தொழிற்சாலைக்குள் அந்தப் பிரசுரங்களைக் கொண்டுபோக உத்தேசித்திருக்கிறாள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்; ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து கேட்கும் அவனது அறிவைக் கண்டு தாய் பிரமிப்பு அடைந்தாள்.

அவர்கள் இந்த விஷயத்தைப் பேசி முடித்தவுடன், மீண்டும் தங்களது பிறந்த ஊர் ஞாபகங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அவனோ மிகவும் குஷாலாகப் பேசினான். அவளோ தனது கடந்து போன வாழ்வின் நினைவுலகத்தில் தன்னை மறந்து சுற்றித் திரிந்தாள். அது ஒரு சதுப்பு நிலம்போலத் தோன்றியது. சதுப்பு நிலத்தில் சிறுசிறு மண் குன்றுகள்; குன்றுகளின் மீது குத்துக்குத்தான காட்டுப்பூச்செடிகள்; குன்றுகளுக்கிடையே வெண்மையான பெர்ச் மரக்கன்றுகளும் குத்துப் புல் செடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்தன. மெல்லிய பூச்செடிகள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தன. பெர்ச் மரக்கன்றுகள் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று, ஐந்து வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பிடிப்பற்ற நிலத்தில் கால் ஊன்றி நிற்கமுடியாமல் முடி சாய்ந்து விழுந்து அதிலேயே அழுகிப் போயின. இந்தக் காட்சியை கண்டபோது, அவளது இதயத்தில் ஒரு பெரும் சோக உணர்ச்சி கவிழ்ந்து சூழ்ந்தது. மீண்டும் அவளது மனக்கண் முன்னால் ஒரு இளம் பெண்ணின் உருவம் தோன்றியது. அந்த இளம் பெண்ணின் முகம் துடிப்பும் எடுப்பும் நிறைந்து உறுதியைப் பிரதிபலிக்கும் உணர்ச்சியோடு விளங்கியது. அந்தப் பெண் தன்னந்தனியாக, தள்ளாடித் தள்ளாடி கொட்டும். பனிமழையினூடாக நடந்து சென்றாள்..... அவளது மகன் சிறையிலே இருந்தான். அவன் தூங்கிவிடவில்லை. வெறுமனே படுத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்..... அவன் அவளைப்பற்றி, தன் தாயைப்பற்றிச்