பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

மக்சீம் கார்க்கி


சட்டைக்குள்ளாக, நெஞ்சுக்குப் பக்கமாகத் திணித்து ஒளித்து வைக்கப்பெற்றன.

“நாம் இன்றைக்கு வீட்டுக்குப் போகவேண்டாம்” என்று சத்தமாகச் சொன்னான் அவன்; “இவளிடமே வாங்கிச் சாப்பிடலாம்.” அப்படிப் பேசிக்கொண்டே அவன் இன்னொரு கத்தையை எடுத்து பூட்சுக் காலுக்குள் திணித்துக் கொண்டான். “இந்தப் புதிய கூடைக்காரிக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டான்.

“ஆமாம்!” என்று சிரிப்புடன் ஆமோதித்தான் இவான்.

தாய் சுற்றுமுற்றும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டாள்.

“சூடான சேமியா, சூப்” என்று கத்தினாள்.

பிறகு மிகவும் சாதுரியத்தோடு பிரசுரக் கட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவர்கள் கையிலே கொடுக்க ஆரம்பித்தாள். அவளது கண்முன்னால் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம் நெருப்புப்பற்றிய தீக்குச்சியைப் போலத் தெரிந்தது. அவள் தனக்குத்தானே வன்மத்துடன் ஏதோ சொல்லிக்கொண்டாள்.

“இதோ, இது உனக்கு அப்பனே.”

பிறகு அடுத்த கத்தையைக் கொடுத்தாள்.

“இந்தா.....”

தொழிலாளர்கள் கைகளில் குவளைகளை ஏந்தியவாறு அவள் பக்கமாக வந்தார்கள். அவர்களில் யாரேனும் பக்கத்தில் வருவதாகத் தெரிந்தால் உடனே இவான் கூஸெவ் வாய்விட்டுச் சிரிப்பான்; உடனே தாய் பிரசுரங்களைக் கொடுப்பதை மறைத்துவிட்டு, சேமியா சூப், கொடுக்க ஆரம்பித்துவிடுவாள்.

“நீ ரொம்பக் கெட்டிக்காரி, பெலகேயா நீலவ்னா” என்று கூறி அந்தச் சகோதரர்கள் இருவரும் சிரித்தார்கள்.

“தேவை வந்தால் திறமையும் கூடவே வந்துவிடும்” என்று பக்கத்தில் நின்ற கொல்லுத் தொழிலாளி ஒருவன் சொன்னான். “பாவம் அவளுக்கு உழைத்துப்போட்டு உணவு கொடுத்தவனை அவர்கள் கொண்டுபோய்விட்டார்கள் அயோக்கியப் பயல்கள்! சரி, எனக்கு மூன்று கோபெக்குக்குச் சேமியாகொடு. கவலைப்படாதே. அம்மா, எப்படியாவது உன்பாடு நிறைவேறிவிடும்.”

“நல்ல வார்த்தை சொன்னாயே. உனக்கு ரொம்ப நன்றி” என்று இளஞ்சிரிப்போடு பதில் கூறினாள் தாய்.