பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

135


“இன்னொரு பழமொழி, தெரியுமா? விக்ரகத்தை வெறித்துப் பார்த்தால் மட்டும் சந்நியாசி. ஆக முடியாது.”

“ஊம்” என்று தலையை வெட்டியசைத்துக்கொண்டு சொன்னான் ஹஹோல், “பழமொழிகளுக்கா குறைச்சல்? “குறையத் தெரிந்தால் நிறையத் தூங்கலாம்!” இந்தப் பழமொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்? எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான் பிறக்கின்றன. இவற்றைக் கொண்டு மனத்திற்குக் கடிவாளம் பின்னுகிறது. வயிறு மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக, அதைப் பக்குவப்படுத்துவதற்காகவே பழ்மொழிகள் உதவுகின்றன.

“இது என்ன எழுத்து?”

“எல்” என்றாள் தாய்.

“சபாஷ்! பார்த்தாயா. இவை எல்லாம் எப்படி ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன! சரி இது என்ன!”

அவள் தன் கண்களைச் சுழித்து விழித்து, புருவங்களைச் சுருக்கிவிரித்து மறந்து போன அந்த எழுத்து என்னவென்பதை ஞாபகப்படுத்துவதற்காக அரும்பாடுபட்டாள். தன்னை மறந்து அந்த முயற்சியில் அவள் ஈடுபட்டாள். ஆனால் சீக்கிரமே அவள் கண்களில் அசதி தட்டிவிட்டது. கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. முதலில் வழிந்தது சோர்வுக் கண்ணீர். பின்னர் வழிந்ததோ சோகக் கண்ணீர்.

“நானாவது படிக்கிறதாவது?” என்று பொருமினாள். “நாற்பது வயதுக் கிழவி நான் இப்போதுதான் படிக்கத் தொடங்குகிறேன்.”

‘அழாதீர்கள்’ என்று பரிவோடு கூறினான் ஹஹோல். “நீங்கள் நன்றாக வாழத்தான் முடியாது போயிற்று; ஆனால் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு படுமோசமானது என்பதையாவது உணர்ந்துகொண்டீர்கள். நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பினால், எத்தனை ஆயிரம் பேரானாலும் நல்வாழ்வு வாழ முடியும். ஆனால் அவர்களோ மிருகங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த வாழ்க்கையைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறார்கள். ஒரு மனிதன் இன்றைக்கும் உண்கிறான். உழைக்கிறான். நாளைக்கும் உண்பான். உழைப்பான், இப்படியே என்றென்றைக்கும் அவனது வாழ்நாள் முழுதும் தினம் தினம் உண்பதும் உழைப்பதுமாகவே அவன் வாழ்ந்தால் அதனால் என்ன லாபம்? இதற்கிடையில் பிள்ளைகளை வேறு பெற்றுப் போடுகிறான். குழந்தைப் பருவத்தில் அவை அவனுக்குக் குதூகலம் அளிக்கின்றன. கொஞ்சம் வளர்ந்து வயிற்றுக்கு அதிக உணவு கேட்கும் அளவுக்கு அந்தக் குழந்தைகள்