பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

மக்சீம் கார்க்கி


'நான் பாடம் படிப்பது உனக்கு ஒரு வேடிக்கையாயிருந்தால் என்னை ஏன் நீ படிக்கச் சொல்கிறாய்?’ என்று அவள் தனக்குள்ளாகவே நினைத்துக்கொள்வாள்.

ஆனால் எத்தனை எத்தனையோ முறை அவள் அவனை நெருங்கி ஏதாவது ஒரு அரும்பதத்துக்கு அர்த்தம் கேட்பாள். அப்படிக் கேட்கும்போது அவள் தன் பார்வையையும் வேறுபுறமாகத் திருப்பிக் கொள்வாள். கேட்கின்ற பாவனையிலும், தான் அதிக அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளமாட்டாள், என்றாலும் அவள் இரகசியமாய்க் கல்வி கற்று வருகிறாள் என்பதை அவன் ஊகித்துக்கொள்வான். அவளது அடக்கமான குணத்தைக் கண்டு வியந்து. அவளைப் பாடம் படிக்குமாறு கேட்டுக்கொள்வதை நிறுத்திக்கொண்டுவிட்டான்.

“என் கண்கள் வரவர மோசமாகி வருகின்றன. அந்திரியூஷா! எனக்கு ஒரு கண்ணாடி வேண்டும்” என்று அவள் அவனிடம் ஒருநாள் சொன்னாள்.

“அதற்கென்ன? போட்டால் போகிறது” என்றான் அவன்” ஞாயிற்றுக்கிழமையன்று நகரிலுள்ள டாக்டரிடம் அழைத்துப் போகிறேன், கண்ணாடியும் வாங்கிக்கொள்வோம்.

19

பாவெலைப் பார்க்க அனுமதி கோரி அவள் மூன்றுமுறை சிறைக்குச் சென்றாள். பெரிய மூக்கும், சிவந்த கன்னங்களும் நரைத்த தலையும் கொண்ட போலீஸ்காரர்களின் ஜெனரல் ஒருவன் அங்கிருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் அவளிடம் இதமாகப்பேசி, அனுமதி தரவே மறுத்துவிட்டான்.

“அம்மா., நீ இன்னும் ஒருவார காலமாவது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவாரம் கழியட்டும். அப்புறம் பார்க்கலாம். ஆனால் இப்போது மட்டும் அது முடியாத காரியம்” என்பான்.

அவன் உருண்டு திரண்டு கொழுத்துப்போய் இருந்தான்: பழுத்து அதிக நாளாகி, பூஞ்சைக் காளான் படர்ந்துபோன காட்டிலந்தைப் பழத்தைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான். அவன் எப்போதும் ஒரு சிறு மஞ்சள் நிறமான ஈர்க் குச்சியால் தனது சின்னஞ் சிறிதான வெள்ளைநிற உளிப்பற்களைக் குத்திக் கொண்டிருந்தான். அவனது சின்னங்சிறு பசிய கண்கள் அன்பு ததும்பச் சிரித்தன. அவன் எப்போதுமே நட்போடு பேசினான்.