பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

மக்சீம் கார்க்கி


"அந்தப் பிரசுரங்கள் மீண்டும் தலைகாட்டியவுடன், அவர்கள் என்னைக்கூடச் சோதனை போட்டுவிட்டார்கள்” என்று கொஞ்சம் தற்பெருமையுடனேயே அவள் சொல்லிக் கொண்டாள்.

“ஏய்! மீண்டும் அதையா பேசுகிறாய்?” சினந்து போய்ச் சொன்னான் சிறை அதிகாரி. “அதைத்தான் பேசக்கூடாது என்று ஒருமுறை சொல்லிவிட்டேனே. ஒரு மனிதனை எதற்காகச் சிறையில் அடைக்கிறார்கள்? வெளியில் நடப்பது என்ன என்பது அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்குத்தானே. நீயோ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய். ம்? எது எதைப் பேசக்கூடாது என்பது இன்னுமா தெரியவில்லை?”

“போதும் அம்மா” என்றான் பாவெல். ‘மத்வேய் இலானவிச் மிகவும் நல்லவர். அவரைக் கோபமூட்டுவதில் அர்த்தமே இல்லை. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நீ வந்த சமயத்தில் இவர் இருந்ததே ஒரு நல்லகாலம். வழக்கமாக இவருடைய மேதிகாரிதான் இருப்பான்.”

“சரி நேரமாய்விட்டது” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே சொன்னான் சிறையதிகாரி.

“ரொம்ப வந்தனம். அம்மா கவலைப்படாதே. என்னைச் சீக்கிரம் விடுதலை செய்துவிடுவார்கள்” என்றான் பாவெல்.

அவன் அவளை ஆர்வத்தோடு அணைத்து முத்தமிட்டான். அவனது அரவணைப்பினால் உள்ளம் நெகிழ்ந்து, ஆனந்தப் பரவசமாகி வாய்திறந்து கத்திவிட்டாள் தாய்.

“சரி போதும். புறப்படு” என்று சொன்னான் சிறையதிகாரி, பிறகு அவளை வெளியே அழைத்துவரும்போது அவளிடம் லேசாக முணுமுணுத்தான்” அழாதே, அவர்கள் அவனை விட்டுவிடுவார்கள். எல்லோரையுமே விட்டுவிடுவார்கள். வரவர, இங்கே கூட்டம்தான் பெருத்துப் போயிற்று.”

வீட்டுக்கு வந்தவுடன் அவள் ஹஹோலிடம் எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லும்போது அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. புருவங்கள் துடிதுடித்தன.

“நான் அவனிடம் அதை எவ்வளவு சாமர்த்தியமாகச் சொன்னேன். தெரியுமா? அவன் அதைப் புரிந்துகொண்டுவிட்டான்: அவனுக்குப் புரிந்திருக்கத்தான்வேண்டும்” என்று கூறிவிட்டுப் பெருமூச்செறிந்தாள். ‘இல்லையென்றால் அவன் என்னிடம் அத்தனை அன்பு காட்டியிருக்கமாட்டான். அவன் அப்படிக் காட்டிக் கொண்டதே இல்லை.”