பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

மக்சீம் கார்க்கி


எல்லாமே அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவளது வாழ்க்கையில் முதன்முதலாக ஏற்பட்டுள்ள இந்தப் பேரானந்தம் என்றும் எப்போதும், இன்றிருப்பது போலவே, வலிவும் வனப்பும் பெற்று நிலைத்திருக்க வேண்டும் என அவள் விரும்பினாள். அந்தப் பேரானந்தம் எங்கே கரைந்தோடிவிடப் போகிறதோ என்று பயந்து, அவள் அந்த ஆனந்தத்தை வெளியிடாமல் தன்னுள்ளேயே அடக்கிச் சிறை செய்ய முயன்றாள். அபூர்வமான பறவையொன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணியில் சிக்கிவிட்டால். ஒரு பறவை பிடிப்பவன் அது பறந்துபோய்விடாமல் எப்படி பிடித்து அடைப்பானோ அந்த மாதிரி இருந்தது அவளது பரபரப்பு.

“சரி, நாம் சாப்பிடலாம், நீ இன்னும் ஒன்றும் சாப்பிடவில்லையே, பாஷா?” என்று பரபரப்போடு கேட்டாள் அவள்.

“இல்லை, நேற்று சிறையதிகாரி என்னை விடுதலைபண்ணப் போகும் செய்தியைச் சொன்னார். அதிலிருந்து எனக்குச் சாப்பாடும் செல்லவில்லை; தண்ணீர்கூட இறங்கவில்லை” என்றான் பாவெல்.

“சிறையை விட்டு வெளியே வந்ததும் முதன்முதல் நான் சந்தித்தது சிஸோவைத்தான்” என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தான் பாவெல், “என்னைக் கண்டவுடன் வரவேற்றுப் பேசுவதற்காக அவன் தெருவைக் கடந்து வந்தான். நான் அவனை எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்லிவைத்தேன். ‘இப்போதுதான் நான் ஒரு பயங்கர ஆசாமியாச்சே! அதிலும் போலீஸ் கண்காணிப்பிலுள்ள ஆசாமி’ ‘சரி. அந்தக் கவலை வேண்டாம்’ என்றான் அவன். அவனது மருமகனைப் பற்றி அவன் விசாரித்ததை நீ கேட்டிருக்க வேண்டும். ‘பியோதர் ஒழுங்காக இருக்கிறான் அல்லவா?’ என்று கேட்டான். ‘சிறையில் எப்படியப்பா ஒழுங்காக இருப்பது? என்றேன் நான். “சரி, அவன் தன் தோழர்களுக்கு எதிராக ஏதாவது உளறிக் கொட்டுகிறானா?” என்று கேட்டான் சிஸோவ். பியோதர் ரொம்பவும் நல்லவன், யோக்கியன், புத்திசாலி என்று நான் சொன்னேன். உடனே அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக்கொண்டு, ‘எங்கள் குடும்பத்தில் மோசமானவர்கள் பிறப்பதில்லை!’ என்று பெருமையோடு சொல்லிக்கொண்டான்.”

“அந்தக் கிழவனுக்கும் மூளை இருக்கிறது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.. “அவனோடு நான் எத்தனையோ முறை பேசியிருக்கிறேன். ரொம்ப நல்லவன். சரி, அவர்கள் பியோதரையும் சீக்கிரம் விடுதலை செய்யப் போகிறார்களா?”

“எல்லோரையுமே விட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கிழட்டு இஸாய் சொல்லும் சாட்சியத்தைத் தவிர, அவர்களுக்கு