பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1

புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில், தொழிலாளர் குடியிருப்புக்கு மேல், நாள்தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியைத் தூக்கத்தால் மீண்டும் பெறாத தொழிலாளர்கள், ஆலைச்சங்கின் அழைப்புக்குப் பணிந்து, அழுது வடியும் வீடுகளிலிருந்து கடுகடுத்த முகங்களுடன் அடித்து மோதிக்கொண்டு வெளியே ஓடி, கலைபட்ட கரப்பான் பூச்சிகளைப் போலத் தெருக்களில் மொய்ப்பார்கள். ஒரு அலட்சியமான தன்னம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்த அந்த ஆலை, பதிற்றுக் கணக்கான விளக்குகளால் புழுதி படிந்த சாலையில் ஒளிபாய்ச்சிக்கொண்டிருக்கும். குளிரும் குமரியிருட்டும் கவிந்த அந்த அதிகாலையில், செப்பனிடப்படாத சாலையில் அவ்வாலையின் கற்கூடாரங்களை நோக்கி விரைவார்கள் தொழிலாளர்கள். பரபரக்கும் அவர்கள் பாதங்களின் கீழே புழுதி நெறுநெறுக்கும். தூங்கி வழியும் கரகரப்பான கூக்குரல்கள் எங்கும் எதிரொலிக்கும். கொச்சைத்தனமான வசவுகள் காற்றைச் சீறிக் கிழிக்கும். இயந்திரங்களின் ஓங்காரமும். நீராவியின் முணமுணப்பும் இத்தொழிலாளர்களுக்கு எதிராக மிதந்து வரும். குண்டாந்தடிகள் போன்ற, நீண்ட கரிய புகைபோக்கிகள், அக்குடியிருப்புகளைவிட உயர்ந்து நின்று துயரமும், கடுகடுப்பும் காட்டிக்கொண்டிருப்பது தொலை தூரத்திலிருந்தும் தெரியும்.

சாயங்காலச் சூரியன், வீட்டுச் சாளரங்களின் மீது, ஓய்ந்து போன தன் கிரணங்களைப் படரவிடும் மாலைப் பொழுதில். செமித்துத் தள்ளப்படும் கசடு போல், தன் பாறை வயிற்றுக்குள்ளிருந்து, தொழிற்சாலை மக்களை வெளித்தள்ளும். மீண்டும் அவர்கள் அந்த அசுத்தமான தெருக்களின் வழியே கறுத்துப் புகையடித்த முகங்களோடு, பளபளக்கும் பசித்த பற்களோடு, யந்திர எண்ணையின் பிசுக்கு நாற்றம் அடிக்கும் உடலங்களோடு, நடந்து வருவார்கள். அப்போது அவர்களது குரலில் ஓரளவு உயிர் இருக்கும். உவகையும் கூட இருக்கும். அன்றைய நாள் வேலை முடிந்தது; வீட்டில் உணவும் ஒய்வும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

தொழிற்சாலை யந்திரங்கள் தேவையான மட்டும் அந்தத் தொழிலாளர்களது சக்தியை உறிஞ்சித் தீர்த்துவிடுவதோடு அந்த நாள்