பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மக்சீம் கார்க்கி


விழுங்கப்பட்டுவிடும். எந்தவிதமான எச்சமிச்சங்களும் இல்லாமல் அன்றையப் பொழுது அழிந்து கழியும்; மனிதனும் தனது சவக்குழியை நோக்கி ஓரடி முன்னேறிவிடுவான். ஆனால் இப்போதோ ஒய்வின் சுகத்தையும், புகைமண்டிய சாராயக் கடையின் சந்தோஷத்தையும் அவன் எதிர்பார்ப்பான். அதில் அவனுக்குத் திருப்தி.

ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஜனங்கள் பத்து மணி வரையிலும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். கண்ணியமான இல்லறவாசிகள் தங்களிடமுள்ள சிறந்த ஆடையணிகளைத் தரித்துக்கொண்டு பிரார்த்தனைக்காகத் தேவாலயத்துக்குச் செல்வார்கள். போகும்போது இளவட்டப் பிள்ளைகள் மதத்தின் மீது காட்டும் அலட்சியத்தைக் கண்டித்துச் சரமாரியாகப் பேசிக்கொண்டே செல்வார்கள், பிரார்த்தனை முடிந்த பின்னர் அவர்கள் வீட்டிற்குத் திரும்பி, அப்பம் சாப்பிடுவார்கள். மீண்டும் மாலைவரை தூங்கத் தொடங்குவார்கள்.

வருஷக் கணக்காக அதிகரித்துக்கொண்டே வரும் அலுப்பினால், அவர்களது வயிற்றுப் பசிகூட மந்தித்துப் போய்விட்டது. அந்த வயிற்றை உணர்ச்சி பெறச் செய்வதற்காக அவர்கள் கார நெடி நிறைந்த ஓட்கா மதுவைக் குடித்துக் குடித்துக் கிளர்ச்சி தரும் எரிச்சலை உண்டுபண்ணிக் கொள்வார்கள்.

மாலை நேரங்களில் அவர்கள் வீதிகளில் சுற்றித் திரிவார்கள்: ரப்பர் செருப்பு உடையவர்கள், தெருவின் தரை காய்ந்துபோயிருந்தாலும்கூட அதைப்போட்டுக்கொண்டு திரிவார்கள்; குடை வைத்திருப்பவர்கள், பொழுது வெளிறிட்டு நிர்மலமாக இருக்கும்போதும், அதை உடன் கொண்டுபோவார்கள்.

வழியில் தங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது தொழிற் சாலையைப் பற்றியும் யந்திரங்களைப் பற்றியும் பேசிக்கொள்வார்கள். மேஸ்திரிகளை வைவார்கள். அவர்கள் தங்கள் தொழிலோடு சம்பந்தப்பட்ட விஷயங்களையே பேசினார்கள், சிந்தித்தார்கள், பேசிய விஷயத்தைப் பேசிப் பேசிச் சலித்துப் போன அவர்களது அன்றாடப் பேச்சில் என்றாவது ஒருநாள்தான் ஏதோ ஒரு சக்தியற்ற எண்ணத்தின் ஒளி லேசாக மின்னிட்டுப் படர்ந்து மறையும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பியவுடன் தங்கள் மனைவிமாரோடு சண்டை பிடிப்பார்கள்: அடிக்கவும் செய்வார்கள்; தங்களது முஷ்டிகள் வலி கண்டாலும்கூட அடிப்பதை நிறுத்தமாட்டார்கள், இளைஞர்கள் சாராயக் கடைக்கு அடிக்கடி செல்லுவார்கள், அல்லது வேறு யார் வீட்டுக்காவது சென்று பொழுது போக்குவார்கள்; அங்கு ஆர்மோனியம் வாசிப்பார்கள், ஆபாசமான பாட்டுக்களைப் பாடுவார்கள், ஆடுவார்கள், ஏசுவார்கள்,