பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

199


“நானும்தான்.”

நான் குளிக்கிற இடத்துக்குப் போகப்போகிறேன்” என்றான் அந்திரேய். அவன் லேசாகச் சிரித்தான். பிறகு தன் துணிமணிகளைச் சேகரித்துக்கொண்டு, உற்சாகமேயற்று வீட்டைவிட்டு வெளியில் சென்றான்.

தாய் அன்பு ததும்பும் கண்களோடு அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு, பாவெல்” என்று பேசத் தொடங்கினாள் தாய். “ஒரு மனிதனைக் கொலைசெய்வது மகாபாபம் என்று எனக்குத் தெரியத்தான் செய்கிறது. என்றாலும் நான் யாரையுமே குற்றஞ்சாட்டமாட்டேன். நான் இஸாயிக்காக அனுதாபப்படுகிறேன். அவன் ஒரு குள்ளப்பிறவி. அவனை இன்று பார்த்தபொழுது, அவன் என்னைப் பார்த்துச் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உன்னைத் தூக்கில் போடப் போவதாக அவன் என்னைப் பயமுறுத்தினான். ஆனால் அவனே இப்போது செத்துப்போய் விட்டான். அவன் மறைந்து போனான் என்பதற்காக சந்தோஷப்படவோ. அவன் சொன்ன சொல்லுக்காக அவனைப் பகைப்பதற்கோ என்னால் முடியாது. அப்போது நான் அவன்மீது அனுதாபம் கொண்டேன், இப்போது அந்த அனுதாபம்கூட இல்லை....”

அவன் மீண்டும் மௌனமாகிச் சிந்தனையில் ஆழ்ந்தான், பிறகு வியப்பு நிறைந்த புன்னகையோடு மேலும் பேசினான்:

“அட கடவுளே பாஷாக்கண்ணு! நான் சொல்வதையெல்லாம் கேட்கிறாயா?”

உண்மையில் அவள் பேச்சை அவன் கேட்கவில்லை. எனவே அவன் முகத்தைச் சுழித்துக்கொண்டே பதில் சொன்னான். தரையைப் பார்த்தவாறே நடந்துகொண்டிருந்த பாவெல் பின்வருமாறு சொன்னான்:

“இதுதானம்மா வாழ்க்கை ! ஜனங்கள் ஒருவருக்கொருவர் எப்படி புதிருமாய் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? நீ உன் விருப்பத்துக்கு விரோதமாக ஒருவனை அடித்து வீழ்த்திவிடுகிறாய், ஆனால் தாக்கப்படுவது யார்? உனக்கு இருக்கும் உரிமைகளைவிட எந்த அளவிலும் அதிக உரிமையற்ற ஓர் அப்பாவிப் பிராணியையா தாக்குவது? இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் உன்னைவிட அதிருஷ்டக் குறைவான பிறவி; காரணம் — அவன் ஒரு முட்டாள். போலீஸ், அரசியல் போலீஸ், ஒற்றர்கள் எல்லோரும் நமது எதிரிகள். ஆனால், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே. நம்மைப்போலவே,