பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

மக்சீம் கார்க்கி


அவனைப் பார்த்ததில் தாய்க்குச் சந்தோஷம். அவனது கருத்துப்போன அகன்ற கையைப் பற்றிப் பிடிப்பதற்காக அவள் அவன் அருகே சென்றாள்.

“அம்மாடி!” என்று ஆழ்ந்த பெருமூச்சுவிட்டாள் அவள், அப்படிப் பெருமூச்சு விடும்போது, தார் எண்ணெயின் காரநெடி அவளது சுவாசத்தில் நிரம்பிக் கமறியது. “உன்னைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ரியுமா?”

பாவெல் புன்னகை புரிந்தான். ரீபினைக் கூர்ந்து பார்த்தான்.

“நல்ல முஜீக்”

பிறகு ரீபின் தன் மேலாடையைக் களைய முனைந்தான்.

“ஆமாம் நான் பழையபடியும் முஜீக் ஆகிறேன். நீங்களெல்லாம் கனவான்களாகிக் கொண்டிருக்கிறீர்கள். நான் மட்டும் எதிர்மாறான திசையில் போய்க்கெண்டிருக்கிறேன்!”

அவன் தன் பல நிறச் சட்டையை ஒழுங்குபடுத்தியவாறு அறைக்குள் நடந்தான்; சுற்றுமுற்றும் பார்த்தான்.

“புத்தகங்களைத் தவிர. இங்கு புதிதாக ஒன்றையும் காணோம். சரி, எனக்கு நீ எல்லா விவரத்தையும் சொல்லு.”

அவன் தன் கால்களை அகட்டிப் போட்டவாறு உட்கார்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு, தனது கரிய கண்களால் பாவெலையே பார்த்தவாறு அவன் சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கிப் புன்னகை செய்தபடி இருந்தான்.

“எல்லாம் நன்றாய்த் தானிருக்கிறது” என்றான் பாவெல்.

“உழுகிறோம், விதைக்கிறோம், கதிர்கண்டு களிக்கிறோம்: வட்டிக்கிறோம் பீரை, தூங்கிக் கழிக்கிறோம் நாளை — அப்படியா?” என்று கூறிச் சிரித்தான் ரீபின்.

“சரி. நீங்கள் எப்படிக் காலத்தைப் போக்குகிறீர்கள், மிகயீல் இவானவிச்?” என்று அவனுக்கு எதிராக உட்கார்ந்தான் பாவெல்.

“நான் ஒழுங்காகத்தான் காலம் தள்ளுகிறேன். எகில்தேயவோ என்னும் ஊரில் வசிக்கிறேன். அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நல்ல ஊர்; சின்னப் பட்டணம். வருஷத்திலே இரண்டு சந்தை கூடும், சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கிறார்கள். எல்லோரும் மோசமான ஜனங்கள், அவர்களுக்குச் சொந்தத்தில் நிலம் கிடையாது. எல்லாம் குத்தகை நிலம்தான். செழிப்பானதல்ல: அட்டை போன்ற ஒரு பண்ணைக்காரனிடம் நானும்