பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

மக்சீம் கார்க்கி


இருக்கத்தான் செய்யும், வார்த்தைகள்தான் வித்தியாசமாயிருக்கும். விஷயம் ஒன்றுதான். வேண்டுமானால், நீ தரும் புத்தகங்களில் இருப்பதைவிட, அதில் உண்மை கொஞ்சம் குறைவாக இருக்கலாம். சுருங்கச் சொன்னால், நான் எந்தக் கொள்கைக்காக வாழ்கிறேனோ அதே கொள்கைக்காகத்தான் அவர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் சுற்றி வளைத்துத் திரிகிறார்கள். நான் நேர் பாதையில், விரைந்து முன்னேறிப் போகிறேன். அவ்வளவுதான். முதலாளிகளின் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், எங்கள் இருவரையுமே தண்டிக்க வேண்டியதுதான். சரிதானே? இது இரண்டாவது. மூன்றாவதாக ஒரு விஷயம் இருக்கிறது. அவர்களுக்கும் எனக்கும் தொடர்பே கிடையாது. நடந்து செல்லும் தரைப்படை குதிரைப்படையாட்களோடு சிநேகம் கொள்ள முடியாது. முஜீக்காயிருந்தால் நான் அந்த மாதிரி நடந்துகொள்ளமாட்டேன். ஆனால் அந்த உபாத்தியாயரோ ஒரு பாதிரியாரின் பிள்ளை, உபாத்தியாயினியோ. ஒரு பண்ணையாரின் மகள், அவர்கள் இருவரும் ஜனங்களை. ஏன் தூண்டிவிடப் போகிறார்கள்? என்னைப் போன்ற ஒரு முஜீக்குக்கு அந்தக் கனவான்களின் மனதில் இருப்பது எட்டாது. எனக்கு நான் செய்கின்ற காரியம் நன்றாய்த் தெரியும். அவர்கள் — அந்தப் படித்த சீமான்கள் — எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பது எனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத, புரியாத விஷயம். ஆயிரம் வருஷ காலமாக அந்தக் கனவான்கள் தங்கள் இடத்தில் சுகமாக வாழ்ந்துகொண்டு, முஜீக்குகளின் முதுகுத்தோலை உரித்தெடுக்கிறார்கள், இப்போது மட்டும் அவர்கள் திடுதிப்பென்று முஜீக்குகளின் கண்களை மறைத்திருக்கும் திரைகளைத் தங்கள் கைகளாலேயே விலக்கிவிடுவார்களா? எனக்கு அந்த மாதிரியான கட்டுக் கதைகளில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று சொல்வது அபாரமான கற்பனை. ஆமாம்! சீமான்களுக்கும் எனக்கும் வெகு தூரம், நீ குளிர்காலத்தில் வயல் வெளி வழியாகக் குறுக்கே நடந்து செல்கிறாய் என்று வைத்துக்கொள். ரோட்டுக்கரைக்கு வந்தவுடன் உனக்கு எதிராக ஏதோ ஒன்று தெரிகிறது என்றும் நினைத்துப் பார். அதென்ன அது? ஒரு நரி, அல்லது ஓநாய். இல்லாவிட்டால் ஒரு நாயாக இருக்கும். என்னவென்று தெரியவில்லை.”

தாய் தன் மகனைப் பார்த்தாள். அவன் மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டான்.

ரீபினின் கண்களில் ஒரு கரிய ஒளி பிரசாசித்தது. அவன் ஆத்ம திருப்தியோடு பர்வெலையே பார்த்துக்கொண்டும் தாடியைத் தடவிக்கொடுத்துக்கொண்டும் இருந்தான்.