பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

207


“நல்லொழுக்கத்தைப் பற்றி நினைப்பதற்கு இது காலமில்லை” என்று தொடங்கினான் ரீபின்: “வாழ்க்கையோ ஒரே சிரம் மயமாயிருக்கிறது. நாய்கள் ஒன்று கூடினால் ஆட்டுமந்தையாகிவிடாது. ஒவ்வொரு நாயும் அதனதன் இஷ்டப்படி குலைத்துத்தள்ளும்.

“சாதாரண மக்களின் நலத்துக்காக, படித்த சீமான்களில் பலபேர் மரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று தனக்குத் தெரிந்தவர்கள் முகங்களையெல்லாம் மனக் கண் முன் கண்டவாறே பேசினாள் தாய்; “அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையுமே சிறையில் கழித்துவிடுகிறார்களே...”

“அவர்களெல்லாம் ஒரு தனி ரகம்’ என்றான் ரீபின்.. “முஜீக் பணக்காரனாகி, படித்த கனவான்களோடு சரிசமானம் பெறுகிறான். படித்த கனவான்கள் ஏழைகளாகி, முஜீக்குகளின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிறார்கள். பணமில்லாவிட்டால் மனம் சுத்தமாயிருக்கும். பாவெல், நீ எனக்குச் சொன்ன விஷயம் ஞாபகம் இருக்கிறதா? ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ, அப்படியேதான் சிந்திக்கிறான் என்று சொன்னாயே, அதுதான் சங்கதி! தொழிலாளி ‘இல்லை’ என்று ஒரு விஷயத்தைச் சொன்னால், முதலாளி அதே விஷயத்தை ‘இருக்கிறது’ என்பான். தொழிலாளி ‘ஆம்’ என்று சொன்னால் முதலாளி தன் குணத்துக்கேற்ப ‘இல்லை’ என்று கத்துவான், இதே முரண்பாடுதான் முஜீக்குகளுக்கும் படித்த சீமான்களுக்கும் இடையில் நிலவுகிறது. முஜீக் ஒருவன் வயிறு நிறையச் சாப்பிடுவதைப் பார்த்தால் உடனே பண்ணைபாருக்கு வயிற்றைக் கலக்கிவிடும். ஒவ்வொரு வர்க்கத்திலும் சில நாய்ப்பிறவிகள் இருக்கத்தான் இருப்பார்கள். நான் ஒன்றும் எல்லா மூஜிக்குகளுக்காகவும் பரிந்து பேசவில்லை....”

அவன் தனது பலம் பொருந்திய கரிய முகத்தைத் தொங்கவிட்டவாறே எழுந்து நின்றான். பற்களைப் பட்டென்று கடித்த மாதிரி, அவனது தாடி நடுங்கி அசைந்தது. எழுந்து நின்றுகொண்டு அவன் மெதுவான தொனியில் மேலும் பேசினான்:

“ஐந்து வருஷ காலமாக நான் ஒவ்வொரு தொழிற்சாலையாய் இடம் மாறித் திரிந்தேன். கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன். புரிகிறதா? என்னால் வாழ முடியவே இல்லை.. நீ இங்கே வாழ்கிறாய், அங்கு நடக்கின்ற அநியாயங்கள் எல்லாம் உனக்குத் தெரியாது. அங்கே பசிக் கொடுமை மக்ளை நிழல்போலத் தொடர்ந்து வாட்டுகிறது. தின்பதற்கு ஒரு ரொட்டி,