பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

233


திடீரென்று ஒரு வெள்ளையான கொடிக்கம்பம். வானில் மேலோங்கி, மீண்டும் கூட்டத்திடையே தாழ்ந்து இறங்கியது. அந்தக் கொடிக்கம்புக்கு வழிவிட்டு மக்கள் விலகினர். ஒரு கணநேரம் கழித்துத் தொழிலாளர் வர்க்கத்தின் விசாலமான செங்கொடி, அண்ணாந்து நோக்கும் மக்களின் முகங்களுக்கு மேலாக நிமிர்ந்து உயர்ந்தது: ஒரு பெரும் செம்பறவையைப் போல் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது!

பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன, அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக்கொண்டிருந்தது.

“தொழிலாளர் வர்க்கம். நீடூழி வாழ்க!” என்று கோஷித்தான் பாவெல்.

நூற்றுக் கணக்கான குரல்கள் அந்த கோஷத்தை எதிரொலித்தன.

“சோஷல்—டெமொக்ரடிக் தொழிலாளர் கட்சி நீடுழி வாழ்க! இதுதான் நமது கட்சி, தோழர்களே, நமது கருத்துக்களின் ஜீவ ஊற்று!”

ஜனக்கூட்டம் பொங்கியது: அந்தக் கொடியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் அதனை நோக்கி விரைந்து சென்றனர். எனவே மாசின், சமோய்லவ், கூ ஸெவ் சகோதரர்கள் முதலியோர் அனைவரும் பாவெலை அடுத்து வந்து நின்றுகொண்டார்கள். நிகலாய் தன் தலையைக் குனிந்து, கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினான். தனக்கு இனந்தெரியாத வேறு சில உற்சாகம் நிறைந்த வாலிபர்கள் தன்னை நெருங்கித் தள்ளிக்கொண்டு முன்னேறுவதை தாய் உணர்ந்தாள்.”

“உலக தொழிலாளிகள் நீடூழி வாழ்க!” என்று கோஷித்தான் பாவெல்.

உவகையும் சக்தியும் நிறைந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கிளறும் ஜெயகோஷம் எதிரொலித்து விம்மியது.

தாய் நிகலாயின் கரத்தையும் வேறு யாரோ ஒருவனுடைய கரத்தையும் பற்றிப் பிடித்துக்கொண்டாள். கண்ணீர் முட்டித் ததும்பத் தொண்டை அடைத்துத் திணறினாள் அவள்: எனினும் அவள் கூச்சலிடவில்லை. அவளது முழங்கால்கள் நடுநடுங்கின, துடிதுடிக்கும் தன் உதடுகளை அசைத்து அவள் ஏதோ முணுமுணுத்தாள்.

“என் அருமைப் பிள்ளைகளே...”

நிகலாவின் அம்மை விழுந்த முகத்தில் ஒரு பரந்த புன்னகை பளிச்சிட்டுத் தோன்றியது. கொடியைப் பார்த்தவாறே அவன் எதோ முணுமுணுத்துக் கொண்டு அதை நோக்கிக் கையை நீட்டினான். திடீரென்று அதே கையால் தாயின் கழுத்தைச் சுற்றி வளைத்து அவளை முத்தமிட்டான். பிறகு கடகடவென்று சிரித்தான்.