பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

மக்சீம் கார்க்கி


நடுங்கின; உதடுகள் அசைந்தன; கை அசைந்தது. தீப்பொறிகளைப் போல் பளிச்சிடும் சில தொடர்பற்ற வார்த்தைகள் மனத்தில் வரவர வளர்ந்து பெருகி, ஒரு பிரம்மாண்டமான ஜோதிப் பிழம்பாக விரிந்து விம்மி, அந்த வார்த்தைகளை வெளியிட்டுச் சொல்லிக் கூக்குரலிடத் தூண்டுவது மாதிரி இருந்தது.

அந்தச் சந்து திடீரென இடதுபுறமாகத் திரும்பியது. அங்கு ஒரு கோடியில் ஜனங்கள் பெருந்திரளாக கூடி நிற்பதை அவள் கண்டாள்.

“என்னடா தம்பிகளா! துப்பாக்கிச் சனியன்களை எதிர்நோக்கிச் செல்வது என்ன, வேடிக்கையா, விளையாட்டா?” என்று பலத்த குரலில் ஒருவன் சொன்னான்.

“நீ அவர்களைப் பார்த்தாயா? அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் அவர்கள் அசையாது நின்றார்கள். மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம்கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்!”

“பாவெல் விலாசவை எண்ணிப்பார்!”

“அந்த ஹஹோலையும்தான்!’

“அவன் தன் கைகளைப் பின்னால் கோத்துக் கட்டியவாறு அப்போதும் புன்னகை செய்தான். அஞ்சாத பேய்ப் பிறவி அவன்!”

“நண்பர்களே!” என்று அவர்கள் மத்தியிலே முண்டியடித்துச் சென்று கொண்டே, தாய் கத்தினாள். ஜனங்கள் அவளுக்கு மரியாதையுடன் வழிவிட்டு ஒதுங்கினார்கள். யாரோ சிரித்தார்கள்:

“பாரடா, அவள் கொடி வைத்திருக்கிறாள்; கொடி அவள் கையில் இருக்கிறது!”

“வாயை மூடு” என்றது ஒரு கரகரத்த குரல்.

தாய் தனது கரங்களை அகல விரித்தாள்.

“கேளுங்கள்–ஆண்டவனின் பெயரால், கேளுங்கள்! நல்லவர்களான நீங்கள் எல்லாம், அன்பான நீங்கள் எல்லாம் என்ன நடந்தது என்பதைப் பயமின்றிப் பாருங்கள்! நம்முடைய சொந்தப் பிள்ளைகள், நமது ரத்தத்தின் ரத்தமான குழந்தைகள், நியாயத்தின் பேரால் இந்த உலகில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் உரிய நியாயத்துக்காக! உங்கள் அனைவரது நலத்துக்காக, உங்களது பிறவாத குழந்தைகளின் நலத்துக்காக, அவர்கள் இந்தச் சிலுவையைத் தாங்கி, ஒளிபொருந்திய எதிர்காலத்தைத் தேடிச் செல்லுகிறார்கள். அவர்கள் வேண்டுவது வேறொரு வாழ்க்கை–