பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

மக்சீம் கார்க்கி


ஒட்டிக்கிடப்பதாகத் தோன்றியது. காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந்தனியாக, துடுப்புக்களோ மனிதத்துணையோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகு நேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள்; யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளிவிட்டார்கள். எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடுகுடுவென்று நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண். அந்தக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்.

தாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனத்தில் அன்றைய தினத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவுகளிடையே எண்ணற்ற சிந்தனைகள். நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகு நேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் குளிர்ந்து போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கக்கூடிய யாராவது ஒரு படாடோபமற்ற புத்திபடைத்த மனிதனைக் காண வேண்டும்; கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக்கொண்டிருந்தது.

அவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்பது போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான். என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக் கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;

“நீங்கள் ஏன் வந்துவிட்டீர்கள்! இப்படிச் செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங்கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்!”

அவன் அவளது கையைப் பற்றி இறுக அழுத்தினான், தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு, அவள் பக்கமாக நெருங்கிக் குனிந்து விறுவிறுவெனப் பேசினான். “பாவெல், அந்திரேய், நான் - எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுநாளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய்விடுவது என்பது எங்கள் ஏற்பாடு” என்றான்.