பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

மக்சீம் கார்க்கி


“இதோ, இதைத் தயைசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

தாய்க்குத் தன்னையறியாமலேயே இளஞ்சிரிப்பு வந்தது. அவள் தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள்;

“உங்களிடம் எல்லாமே புதுமாதிரியாகத்தான் தோன்றுகிறது. பணம் கூட உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிலர் அந்தப் பணத்துக்காகத் தங்கள் ஆத்மாக்களையே விற்றுவிடுகிறார்கள், ஆனால் உங்களுக்கோ அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை, மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் பணத்தை வைத்திருக்க ஒப்புவது போலத் தோன்றுகிறது.”

நிகலாய் மெதுவாகச் சிரித்தான்.

“பணமா, அது ஒரு நச்சுப்பிடித்த பொருள். வாங்குவதானாலும் சரி, கொடுப்பதானாலும் சரி, மனத்துக்கே பிடிப்பதில்லை: அவன் அவள் கையைப் பற்றி அதை லேசாகப் பிசைந்தான், பிறகு மீண்டும் சொன்னான்:

“சீக்கிரம் கிளம்பிவிடுங்கள்!”

பிறகு அவன் வழக்கம் போலவே அமைதியாகச் சென்றான். அவன் செல்வதை அவள் வாசல்வரை சென்று பார்த்தாள். அப்போது தனக்குள் நினைத்துக் கொண்டாள்:

“எவ்வளவு அன்பான மனம்! ஆனால் அவன் எனக்காகப் பரிதாபப்படவே இல்லை.”

இந்த எண்ணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா, அல்லது அதிசயத்தைத் தந்ததா என்பதை அவளால் உணரக்கூட முடியவில்லை.

2

அவன் வந்து சென்ற நாலாவது நாளன்று அவள் அவனுடைய வீட்டுக்குக் குடி போனாள். அவளது இரண்டு பெட்டிகளோடு, அவள் ஏறிச்சென்ற வண்டி அந்தத் தொழிலாளர் குடியிருப்பை விட்டு வெளிவந்து, ஊருக்குப் புறம்பேயுள்ள வெம்பரப்புக்கு வந்து சேர்ந்தது. உடனே அவள் பின்னால் திரும்பிப் பார்த்தாள். எங்கே இருள் படிந்த, இடையறாத துன்பம் கலந்த வாழ்வை அவள் அனுபவித்தாளோ, எங்கே புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.