பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

269


தனது விசாலமான அந்த வீட்டில் கூட நிகலாய் மிகவும் பதனமாகவும் நிதானமாகவும் யாரோ ஒரு அன்னியன் மாதிரி நடமாடித் திரிவதைத் தாய் கண்டாள். அவன் அந்த அறையிலுள்ள பல பொருள்களையும் குனிந்து உற்றுப் பார்த்தான்:

அப்படிப் பார்க்கும்போது தன் வலது கையின் மெல்லிய விரல்களால் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டும், கண்களைச் சுருக்கிக் கூர்மையாக்கிக்கொண்டும் தனக்கு அக்கறையுள்ள பொருள்களைப் பார்த்தான். சில சமயங்களில் அவள் ஒரு சாமானைத் தன் முகத்தருகே கொண்டுபோய்க் கண்களால் தொட்டு உணர்வதுபோலப் பார்த்தான். தாயைப் போலவே அவனும் அந்த அறைக்கு முதன் முதல் வந்திருப்பவன் போலவும், அதனால் அங்குள்ள பொருள்களெல்லாம் அவனுக்குப் புதியனவாக, பழக்கமற்றதாக இருப்பன போலவும் தோன்றியது. இந்த நிலைமை தாயின் மனநிலையைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்தியது. அவள் நிகலாயைத் தொடர்ந்து அந்த இடத்தை முழுதும் சுற்றிப்பார்த்தாள். எங்கு என்ன இருக்கிறது என்று கண்டறிந்தாள். அவனது பழக்க வழக்கங்களைக் கேட்டறிந்தாள். அவன் ஏதோ ஒரு குற்றவாளியைப் போல் கள்ளக் குரலில் பதிலளித்தான். அவன் பதில் சொல்லிய பாவனையானது. ஒரு காரியத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி செய்யாமல் ஆனால் வேறு மாதிரியாகச் செய்யவும் தெரியாதவன் சொல்வது போலத் தொனித்தது.

அவள் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விட்டாள்; பியானோ வாத்தியத்தின்மீது சிதறிக் கிடந்த இசை அமைப்புத் தாள்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். தேநீர்ப் பாத்திரத்தின் மீது பார்வையைச் செலுத்தியவாறு பேசினாள்:

“இந்தப் பாத்திரத்தை விளக்க வேண்டும்.”

அவன் அந்த மங்கிப்போன பாத்திரத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தான்; தன் விரலை முகத்தருகே கொண்டு போய்க் கவனித்தான். தாய் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.

அன்றிரவு அவள் படுக்கைக்குச் செல்லும் போது அன்றைய தினத்தின் சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள். தலையைத் தலையணையிலிருந்து உயர்த்தி, வியப்போடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். வேறொருவருடைய வீட்டில் இரவைக் கழிப்பது என்பது அவளது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை, எனினும் அவளுக்கு அதனால் எந்தவிதச் சிரம உணர்ச்சியும் தோன்றவில்லை. அவள் நிகலாயைப் பற்றி அக்கறையோடு நினைத்துப் பார்த்தாள். அவனது வாழ்வை, முடிந்தவரை மேன்மையுடையதாக்கி, அவனது