பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

மக்சீம் கார்க்கி


தூரத்தொலைவிலுள்ள ஒரு தேவாலயத்துக்கு, அந்த தேவாலயத்திலுள்ள அற்புதச் சித்திவாய்ந்த தெய்வத்துக்கு ஒரு விடுமுறைப் பிரார்த்தனைக்காக குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சி பொங்கச் சென்றுவந்த நினைவைத் தாய் ஞாபகப்படுத்திப் பார்த்தாள்.

சமயங்களில் சோபியா வானத்தைப் பற்றியோ காதலைப் பற்றியோ இனிமையான குரலில் ஏதாவதொரு புதிய பாட்டைப் பாடுவாள். அல்லது வயல் வெளிகளைப் பற்றியும் பாடியுள்ள பாடல்களை ஒப்புவிப்பாள். தாய் அதையெல்லாம் கேட்டு, புன்னகை புரிவாள். தன்னை மறந்து அந்தப் பாடல்களின் இனிமையில் மனம் இழந்து அதன் தாள லயத்துக்குத் தக்கவாறு தலையை ஆட்டிக்கொள்வாள்.

அவளது இதயத்துக்குள்ளே வேனிற் கால இரவில் கம கமவென்று மணம் வீசும் ஒரு சிறு அழகிய நந்தவனத்தில் இருப்பதைப்போல், அமைதியும் தண்மையும் சிந்தனையும் நிரம்பி இருந்தது.

5

அவர்கள் தாங்கள் சேர வேண்டிய இடத்துக்கு மூன்றாவது நாளன்று வந்து சேர்ந்தார்கள், தார் எண்ணெய்த் தொழிற்சாலை எங்கே இருக்கிறது என்பதை, தாய் வயலில் வேலி பார்த்துக்கொண்டிருந்த ஒரு முஜீக்கிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டாள். இதன்பின் அவர்கள் மரம் செறிந்த செங்குத்தான பாதையின் வழியே நடந்து சென்றார்கள், அந்தப் பாதையில் மரவேர்கள் படிக்கட்டுகளைப்போல் குறுக்கும் மறுக்குமாக ஓடி, நடப்பதற்கு வசதியளித்தன. நிலக்கரித் தூளும் மரத்துண்டுகளும் தார் எண்ணெயும் படிந்த ஒரு இடத்தில் வந்து அந்தப் பாதை முடிந்தது.

“ஒரு வழியாக நாம் வந்து சேர்ந்துவிட்டோம்” என்று சாவகாசமாகச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு கூறினாள் தாய்.

மரக்கிளைகளாலும், கம்புகளாலும் கட்டப்பட்ட ஒரு குடிசைக்கு முன்னால், ஒரு மேஜை கிடந்தது; மூன்று பலகைகொண்ட அந்த மேஜை தரையோடு அறையப்பட்ட ஒரு மரக்குதிரையின் மீது இருந்தது. உடம்பெல்லாம் தார் எண்ணெய் படிந்திருக்க, தனது சட்டையின் முன்பக்கம் முழுவதும் திறந்துவிட்டவாறு, ரீபின் அந்த மேஜையருகே உட்கார்ந்து எபீமோடும் வேறு இரு இளைஞர்களோடும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தம்மை நோக்கி வந்த அந்தப் பெண்களை முதன் முதல் கண்டவன் ரீபின்தான், அவன் தன் கையை நெற்றிக்கு நேராக உயர்த்திப் பிடித்துக் கூர்ந்து பார்த்துவிட்டு, மெளனமாக அவர்களது வரவை எதிர்நோக்கி இருந்தான்.