பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

மக்சீம் கார்க்கி


நினைத்தேன், முன்யோசனையுள்ள மனிதன் கண்ணை மூடிக்கொண்டு திடுதிப்பென்று இருட்டில் குதிக்கமாட்டான். பையன்களா! கேட்கிறீர்களா? அவர்கள் தன்னைத் துப்பாக்கிச் சனியனால் தாக்கக்கூடும். அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தக்கூடும் என்று தெரிந்திருந்தும், அவன் தன் செய்கையை நிறுத்தவில்லை. அவனது பாதையில், தாயே குறுக்கே விழுந்து தடை செய்திருந்தாலும், அவன் இவளையும் மீறித்தாண்டிச் சென்றிருப்பான். இல்லையா, நீலவ்னா?”

“ஆமாம், அவன் செய்வான்” என்று சொல்லிக்கொண்டு நடுங்கினாள் தாய்: அவள் பெருமூச்செறிந்தவாறு சுற்றுமுற்றும் பார்த்தாள். சோபியா அவள் கையை அமைதியாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டே, நெற்றியைச் சுருக்கி விழித்து ரீபினையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவன் ஒரு உண்மையான மனிதன்!” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தனது கரிய கண்களால் அங்குள்ளவர்களைப் பார்த்தான் ரீபின், மீண்டும் அந்த ஆறுபேரும் மோன அமைதியில் ஆழ்ந்துவிட்டார்கள். சூரிய கிரணங்கள் தங்கத் தோரணங்களைப்போல் காற்றில் தொங்கி ஊசலாடின. எங்கோ ஒரு அண்டங்காக்கை கத்தியது. தாயின் மன நிலை மே தினத்தின் நினைவாலும், பாவெல், அந்திரேய் இருவரையும் காணாத ஏக்கத்தாலும் குழம்பித் தடுமாறியது. அந்தக் காட்டின் நடுவிலே காலித் தார் எண்ணெய் பீப்பாய்கள் உருண்டு சிதறிக் கிடந்தன, தரையைக் கீறிக் கிளப்பின மரவேர்கள் எங்கு பார்த்தாலும் துருத்தி நின்றன. அந்தக் காட்டின் எல்லையில் ஓக் மரங்களும் பெர்ச் மரங்களும் மண்டிப் பெருகி, அசைவற்று கரிய நிழல்களைத் தரைமீது பரப்பிக்கொண்டிருந்தன.

திடீரென்று யாகவ் அந்த மரத்தடியிலிருந்து விலகி, வேறொரு பக்கமாகச் சென்றான்.

“அப்படியானால், பட்டாளத்தில் சேர்ந்தால் இந்த மாதிரி ஆட்களை எதிர்ப்பதற்காகத்தான் என்னையும் எபீமையும் அனுப்புவார்களோ?” என்று உரத்து, தன் தலையைப் பின்னுக்கு வாங்கி நிமிர்ந்தவாறே கேட்பன் யாகவ்.

“வேறு யார்மீது உங்களை ஏவி விடுவார்கள் என்று நினைத்தாய்?” என்றான் ரீபின். “அவர்கள் நமது கைகளைக்கொண்டே நம்மை நெரித்துக்கொள்வார்கள் —அதுதான் அவர்களுடைய தந்திரம்!”

“எப்படியானாலும் நான் பட்டாளத்தில் சேரத்தான் போகிறேன்” என்று உறுதியோடு சொன்னான் எபீம்.