பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

293


நீட்டினான். சத்தமே செய்துவிடாதபடி சாமான்களைப் புழங்குவதில் அவன் மிகுந்த ஜாக்கிரதையோடிருந்தான். தாய் அந்த விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி முடித்த பின்னர் ஒரு மௌன அமைதி நிலவியது: அந்தச் சமயத்தில் யாரும் யாரையுமே பார்க்கவில்லை. இக்நாத் மேஜையின் முன்னிருந்தவாறே மேஜைப் பலகை மீது நகத்தால் கீறிக்கொண்டிருந்தான். எபீம் ரீபினுக்குப் பின்னால் வந்து அவனது தோளின் மீது தன் முழங்கையை ஊன்றியவாறு நின்றான். யாகல் ஒரு மரத்தின் மீது சாய்ந்து, தனது கைகளைக் கட்டிக்கொண்டு தலையைத் தொங்கவிட்டவாறிருந்தான். சோபியா அந்த முஜீக்குகளைப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்....

“ஹும் - ம் -ம்” என்று மெதுவாகவும் உவகையற்றும் முனகினான் ரீபின். “அப்படியா? அவர்கள் பகிரங்கமாகவே கிளம்பிவிட்டார்களா?”

“நாமும் அந்த மாதிரி ஒரு அணிவகுப்பை நடத்த முனைந்தால்” என்று ஒரு கசந்த புன்னகையோடு பேசினான் எபீம்: “அப்படிச் செய்தால் முஜீக்குகளே நம்மை அடித்துக்கொன்று தள்ளிவிடுவார்கள்.”

“ஆமாம். நிச்சயம் அவர்கள் கொன்று தள்ளிவிடுவார்கள்” என்று தலையை அசைத்து ஆமோதித்தான் இக்நாத். “நானும் தொழிற்சாலை வேலைக்கே போகப்போகிறேன். இங்கே இருப்பதைவிட அங்கு நன்றாயிருக்கிறது.”

“பாவெல் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கும் என்றா சொல்கிறாய்?” என்று கேட்டான் ரீபின். “அப்படியானால் அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? அதைப்பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா?”

“கடுங்காவல், இல்லாவிட்டால் சைபீரியாவுக்கு நிரந்தரமாக நாடு கடத்தப்படுதல்” என்று அமைதியுடன் கூறினாள் அவள்.

அந்த மூன்று இளைஞர்களும் ஒரே சமயத்தில் அவள் பக்கம் திரும்பினார்கள், ரீபின் மட்டும் தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்.

“அவன் அதைச் செய்தபோது, இந்த மாதிரி தனக்கு ஏதாவது நேரும் என்று தெரிந்துதான் செய்தானா?”

“ஆமாம். தெரிந்தே செய்தான்” என்று உரத்த குரலில் சொன்னாள் சோபியா.

எல்லோரும் ஒரே சிந்தனையால் உறைந்துவிட்ட மாதிரி அப்படி அசைவற்றுப் பேச்சற்று மூச்சற்று இருந்தார்கள்.

“ஹும்!” என்று முனகிவிட்டு மெதுவாகவும் வருத்தத்தோடும் பேசினான் ரீபின். “அவனுக்குத் தெரியும் என்றுதான் நானும்