பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

301


கலைத்துவிட்டுக்கொண்டே, மடியில் கிடந்த பத்திரிகையைப் பார்க்கத் தொடங்கினான், ரீபின் கூரை முகட்டிலுள்ள ஒரு கீறல் இடைவெளி வழியாக விழும் சூரிய ஒளிக்கு நேராக, ஒரு பத்திரிகையை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தான். படிக்கும்போது அவனது உதடுகள் மட்டும் அசைந்தன. யாகவ் முழங்காலிட்டுத் தனக்கு முன்னால் குவிந்துகிடக்கும் பிரசுரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தாய் ஒரு மூலைக்குச் சென்று உட்கார்ந்தாள். சோபியா அவளுக்குப் பின்னால் வந்து நின்று, தாயின் தோள் மீது ஒரு கையை வைத்தவாறே, அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

“மிகயீல் மாமா, அவர்கள் முஜீக்குகளான நம்மைச் சீண்டிவிடுகிறார்கள்” என்று எங்கும் பார்க்காமல் யாகவ் அமைதியாகச் சொன்னான். பின் அவனை நோக்கிச் சிரித்தான்.

“அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள். அதனால்தான்!” என்றான் ரீபின்.

இக்நாத் ஆழ்ந்த பெருமூச்சு வாங்கிக்கொண்டே தலையை உயர்த்தினான்.

“இதோ எழுதியிருக்கிறது கேள்: ‘மனிதனாயிருந்த விவசாயி இப்பொழுது மாறிப்போனான். மனித குணங்களையெல்லாம் இழந்துவிட்டான்.’ ஆமாம், அவன் மனிதனாகவே இல்லைதான்!” அவனது தெளிந்த முகத்தில் திடீரென ஒரு கருமை ஓடிப் பரந்தது; அந்த வாக்கியத்தைக் கண்டு அவனது மனம் சிறுத்தது போல் தோன்றியது: “அட புத்திசாலிகளா, என் உடம்புக்குள்ளே புகுந்துகொண்டு நீங்கள் ஒரு நாள் பொழுது சுற்றி வாருங்கள், அப்போது தெரியும் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று.”

“சரி, நான் கொஞ்ச நேரம் படுக்கப்போகிறேன்” என்று சோபியாவிடம் கூறினாள் தாய். “எனக்குக் களைப்பாயிருக்கிறது. அதிலும் இந்த நாற்றம் என்னைக் கிறக்குகிறது. சரி, நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்?”

“நான் ஓய்வெடுக்க விரும்பவில்லை.”

தாய் ஒரு மூலையில் முடங்கிப்படுத்தாள். உடனே தூங்கத் தொடங்கிவிட்டாள், சோபியா அவள் அருகில் உட்கார்ந்து அந்த மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்; தாயின் தூக்கத்தைக் கலைக்க வரும் தேனீக்களையோ குளவிகளையோ கையால் விரட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அரைக் கண் தூக்கத்தில் சோபியா தனக்குச் செய்யும் சேவையைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியுற்றாள் தாய்.