பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

மக்சீம் கார்க்கி


அவர்கள் மீண்டும் அந்தக் காட்டுப்பாதை வழியாக அருணோதய காலத்தின் பசப்பொளியில் அவசரமேதுமின்றி நிதானமாக நடந்து சென்றார்கள்.

“இங்கு, எல்லாம் எவ்வளவு அருமையாயிருந்தது!” என்று சோபியாவுக்குப் பின்னால் நடந்துகொண்டே வந்த தாய் சொன்னாள்!” எல்லாம் சொப்பனம் மாதிரி இருக்கிறது. மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்! உண்மையைத் தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு பெரிய திருநாளன்று மக்களெல்லாம் அதிகாலைப் பிரார்த்தனைக்காகத் தேவாலயத்தில் கூடியிருப்பதுபோலவும், மதகுரு இன்னும் வராததுபோலவும், எங்குமே இருளும் அமைதியும் சூழ்ந்திருப்பது போலவும், அப்போது நம் உடம்பு தவியாய்த் தவிப்பது போலவும், மக்கள் வந்து நிறைந்துகொண்டே இருப்பதுபோலவும் தோன்றுகிறது. அந்தத் தேவாலயத்திலுள்ள விக்ரகத்தின் முன்னால் யாரோ விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள்; கடவுளின் இல்லத்துக்கு ஒளி வருகிறது. இருள் கொஞ்சங் கொஞ்சமாக விலகியோடுகிறது.”

“எவ்வளவு உண்மை!” என்று உவகையோடு சொன்னாள் சோபியா, “இங்கு மட்டும்தான் கடவுளின் இல்லம் உலகம் முழுவதையுமே தழுவி நிற்கிறது!”

“உலகம் முழுவதையுமா?” என்று தலையை அசைத்துச் சிந்தித்துக்கொண்டே சொன்னாள் தாய். “நம்புவதற்கே முடியாத அவ்வளவு பெரிய உண்மை இது. சோபியா! நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்கள். அருமையாயிருந்தது. உங்களை அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்று நான் பயந்திருந்தேன்.”

சோபியா ஒரு கணம் மௌனமாக இருந்தாள்; பிறகு அமைதியோடும் சோர்வோடும் சொன்னாள்:

“அவர்களோடு இருந்தாலே நாமும் எளிமை பெற்றுவிடுகிறோம்.”

அவர்கள் இருவரும் ரீபினைப் பற்றியும் அந்த நோயாளியைப் பற்றியும், கவனம் நிறைந்த மௌனமும், விருந்தாளிகளுக்கு வேண்டிய சின்னஞ்சிறு சேவைகளில்கூட மிகுந்த ஈடுபாடும் நன்றியுணர்ச்சியும் கொண்டிருந்த அந்த இளைஞர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். அவர்கள் காட்டுப் பிராந்தியத்தைக் கடந்து வயல்வெளிக்கு வந்தார்கள். சூரியன் அவர்களுக்கு எதிராக மேலெழுந்தது. எனினும் சூரியனின் முழு உருவமும் வெளியே தெரியவில்லை. செக்கச் சிவந்த கதிர்களை மட்டும் விசிறி மாதிரி வான மண்டலம் முழுவதும்