பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

மக்சீம் கார்க்கி


நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். திடீரென ஒரு கூச்சலிட்டுக் கண்களை மூடிக்கொண்டுவிட்டாள். அந்த வீட்டு வாசலில், தனது பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு நிகலாய் வெஸோவிஷிகோவ் நிற்பது போலத் தோன்றியது! அவள் மீண்டும்பார்த்தபோது அங்கு யாரையுமே காணோம்.

‘இது என் மனப் பிராந்திதான்!’ என்று நினைத்துக்கொண்டே படியேறினாள். காதுகளைத் தீட்டிக் கேட்டாள். வெளிமுற்றத்தில் யாரோ மெல்ல மெல்ல நடக்கும் காலடியோசை அவள் காதில் விழுந்தது. அவள் படியேறி மேலே சென்று, கீழே பார்த்தாள். மீண்டும் அதே முகம். அதே அம்மைத் தழும்பு. விழுந்த முகம் தன்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தவாறு நிற்பதைக்கண்டாள்.

“நிகலாய்! நிகலாய்!” என்று கத்திக்கொண்டே ஏமாற்றத்தால் வேதனையடைந்த இதயத்தோடு அவனை நோக்கி ஒடினாள். “நீ போ போ” என்று தன் கையை ஆட்டிக்கொண்டே அமைதியாகச் சொன்னான் அவன்.

அவள் விடுவிடென்று மாடிப் படியேறி இகோரின் அறைக்கு வந்தாள். அங்கு அவன் ஒரு சோபாவில் படுத்திருப்பதைக் கண்டாள்.

“நிகலாய் ஓடி வந்துவிட்டான் சிறையிலிருந்து” என்று அவள் திக்கித் திணறினாள்.

“எந்த நிகலாய்?” என்று கரகரத்த குரலில் கேட்டுக்கொண்டே தலையணையிலிருந்து தலையைத் தூக்கினான்; “இரண்டு நிகலாய் இருக்கிறார்களே”

“வெஸோவ்ஷிகோவ் அவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான்.

“சபாஷ்!”

இந்தச் சமயத்தில் நிகலாய் வெஸோவ்ஷிகோவே அறைக்குள் வந்து விட்டான். உள்ளே வந்ததும் அவன் கதவைத் தாழிட்டான்; தன் தொப்பியை எடுத்துவிட்டு, தலையைத் தடவிக்கொடுத்தான். லேசாகச் சிரித்துக்கொண்டே நின்றான். இகோர் முழங்கைகளை ஊன்றி எழுந்து கொண்டு, தலையை அசைத்தவாறு சொன்னான்:

“வருக, வருக....”

நிகலாய் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தவாறே தாயிடம் நெருங்கி அவள் கையைப் பற்றினான்.

“நான் மட்டும் உன்னைச் சந்தித்திராவிட்டால், மீண்டும் சிறைக்கே திரும்பி போயிருப்பேன். எனக்கு நகரில் யாரையுமே தெரியாது.