பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

மக்சீம் கார்க்கி


உங்களையும் அவளோடு சேர்த்துவிட வேண்டும். அவள் அடிக்கடி களைத்துச் சோர்ந்துவிடுகிறாள்”

“பேசாதே, இந்த மருந்தைச் சாப்பிடு” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு கண்ணை மூடிக் கொண்டான்.

“எப்படியும் நான் சாகத்தான் போகிறேன். வாயை மூடிப் பேசாதிருந்தாலும் சாகத்தான் போகிறேன்” என்றான் அவன்.

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்கணில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“எல்லாம் சரிதான் —இது இயற்கைதானே! வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது” என்றாள் அவன்.

தாய் அவனது நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னாள்:

“உன்னால் கொஞ்ச நேரம் கூடச் சும்மா இருக்க முடியாதா?”

அவன் தன் கண்களை மூடி, தனது நெஞ்சுக்குள் கரகரக்கும் சுவாசத்தைக் கேட்பது போல இருந்தான். பிறகு உறுதியோடு பேசத் தொடங்கினான்;

“சும்மா இருப்பதில் அர்த்தமே இல்லை. அம்மா. அதனால் எனக்கு என்ன லாபம்? என்னவோ இன்னும் கொஞ்ச விநாடி கால வாதனை. அப்புறம் உங்களைப் போன்ற அற்புதமான பெண்மணியோடு சில வார்த்தைகள் பேசும் ஆனந்தம் கூட எனக்கு அற்றுப்போய்விடும் அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப் போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.

தாய் ஆர்வத்தோடு குறுக்கிட்டுப் பேசினாள்;

“அந்த சீமாட்டி திரும்பவும் வருவாள், வந்து நான் உன்னைப் பேச விட்டதற்காக, என்னைக் கண்டிப்பாள்.”

“அவள் ஒன்றும் சீமாட்டியில்லை. அவள் ஒரு புரட்சிக்காரி நம் தோழி. ஒரு அதிசயமான பெண். அவள் கோபிக்கப் போவது என்னவோ நிச்சயம். அவள் எல்லோரையும்தான் கோபித்துப் பேசுகிறாள்.”