பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

369


ரத்தத்தை இழந்துவிட்டான். நாம் இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவோமா?”

“ஏன்? அவன் இங்கேயே இருக்கட்டுமே!” என்றான் நிகலாய்.

“இன்று இல்லாவிட்டால் நாளையாவது அவனை அனுப்பி வைத்தால்தான் நல்லது. ஆஸ்பத்திரியில் இருந்தானானால் என்னால் இன்னும் மிகுந்த சௌகரியத்தோடு அவனைக் கவனித்துப் பார்க்கமுடியும். அடிக்கடி வந்துகொண்டிருக்க எனக்கு நேரம் கிடையாது. நீ இந்த இடுகாட்டு சம்பவத்தைப்பற்றி ஒரு பிரசுரம் எழுதி வெளியிடுவாயல்லவா?”

“நிச்சயமாய்!” என்றான் நிகலாய்.

தாய் அமைதியுடன் எழுந்து சமையலறையை நோக்கிச் சென்றாள்.

“எங்கே போகிறீர்கள், நீலவ்னா?’ என்று ஒரு விசித்திரச் சிரிப்புடன் கூறினாள் அவள்.

அவள் தன்னறைக்குள் சென்று உடை மாற்றிக்கொள்ளும்போது, இந்த மனிதர்களின் அமைதியைப்பற்றியும், இந்த மாதிரியான பயங்கர விஷயங்களைக்கூட அநாயாசமாக ஏற்றுத் தாங்கும் அவர்களது சக்தியைப் பற்றியும் எண்ணி எண்ணிப் பார்த்துத் தனக்குத்தானே வியந்து கொண்டாள் இந்தச் சிந்தனைகள் அவளுக்குத் தெளிவையுண்டாக்கி அவளது உள்ளத்தில் குடிகொண்டிருந்த பயத்தை விரட்டியடித்தன. அந்தப் பையன் படுத்திருந்த அறைக்குள் அவள் நுழைந்தபோது, சோபியா பையனுடைய படுக்கைக்கு மேலாகக் குனிந்து ஏதோ பேசுவதைக் கண்டாள்.

“அபத்தம், தோழா!” என்றாள் சோபியா,

“நான் போகிறேன்., உங்களுக்குத்தான் தொந்தரவு” என்று பலவீனமான குரலில் அவன் எதிர்த்துப் பேசினான்.

“பேச்சை நிறுத்து. அதுவே உனக்கு ரொம்ப நல்லது.......”

தாய், சோபியாவுக்குப் பின்னால் வந்து அவளது தோளில் கையைப் போட்டுக்கொண்டு நின்றாள்; அந்தப் பையனின் வெளுத்த முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்; வண்டியில் வரும்போது அவன் முனகிய பயங்கரமான விஷயங்களை கேட்டு அவள் எப்படிப் பயந்து போனாள் என்பதையும் அவளிடம் சொன்னாள், இவானின் கண்கள் ஜுர வேகத்தோடு பிரகாசித்தன. அவன் தன் நாக்கைச் சப்புக்கொட்டிவிட்டு, வெட்கம் கவிந்த முகத்தோடு பேசினான்.

“நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”