பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

மக்சீம் கார்க்கி


“சரி, நாங்கள் போகிறோம்” என்று கூறிக்கொண்டே அவனது போர்வையைச் சரி செய்தாள் சோபியா; “நீ தூங்கு.”

அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் வந்தார்கள். அங்கு உட்கார்ந்து அன்று நடந்த சம்பவங்களைப்பற்றி வெகுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய நிகழ்ச்சியை என்றோ வெகு காலத்துக்கு முன் நடந்த சம்பவத்தைப்போலக் கருதி அவர்கள் தங்களது எதிர்காலத்தை, வரப்போகும் நாட்களுக்குரிய வேலைத் திட்டத்தை வகுப்பதுபற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் விவாதித்துக்கொண்டார்கள். அவர்களது முகங்கள் களைத்துத் தோன்றின. எனினும் அவர்களது எண்ணங்கள் மட்டும் துணிவாற்றலோடு விளங்கின. தங்களது வேலைத் திட்டத்தைப்பற்றி அவர்கள் பேசும்போது தங்களுக்குள் எழுந்த அதிருப்தியுணர்ச்சிகளை அவர்கள் மூடி மறைக்கவில்லை. அந்த டாக்டர், நாற்காலியில் நிலைகொள்ளாமல் உட்கார்ந்து நெளிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

“பிரசாரம், பிரசாரம்தான் ஒரே வழி. அது இப்பொழுது குறைச்சல்!” என்று அவன் தனது கூர்மையான மெல்லிய குரலைத் தணிக்க முயன்றவாறே கூறினான். “வாலிபத் தொழிலாளிகள் சரியாக இருக்கிறார்கள். நாம்தான் பிரசாரத்தை விரிவாக்க வேண்டும். தொழிலாளர்கள் சரியாகத்தானிருக்கிறார்கள். அதுமட்டும் எனக்குத் தெரியும்.”

நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே அந்த டாக்டர் பேசிய மாதிரியே பேசத் தொடங்கினான்:

“ஒவ்வொரு இடத்திலிருந்தும் போதுமான புத்தகங்கள் கிடைக்கவில்லையென்று நமக்குப் புகார்கள் வருகின்றன. நமக்கோ ஒரு நல்ல அச்சகம் வைப்பதற்குக்கூட வழியைக் காணோம். லுத்மீலாவோ நாளுக்குநாள் பலவீனப்பட்டு வருகிறாள். நாம் அவளுக்கு ஏதாவதொரு வகையில் உதவாவிட்டால், அவள் பாடு மோசமாகிவிடும்.”

“நிகலாய் வெஸோல்ஷிகோவ் என்ன ஆனான்?” என்று கேட்டாள் சோபியா.

“அவனால் நகருக்குள் வாழமுடியாது. புதிய அச்சகம் வைத்தால்தான் அவன் அதில் வேலை செய்யத் தொடங்கலாம். ஆனால், அதற்கு முன்னால். நமக்குத் தற்சமயத்துக்கு இன்னொரு ஆள்தேவை.”

“நான் செய்யமாட்டேனோ?” என்று அமைதியாகக் கேட்டாள் தாய்.

அவர்கள் மூவரும் ஒன்றும் பேசாமல் தாயையே சில கண நேரம் பார்த்தார்கள்.