பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

371


"அதுவும் ஒரு நல்ல யோசனைதான்!” என்றாள் சோபியா.

“அது உங்களுக்கு மிகுந்த சிரமமான காரியம், நீலவ்னா” என்றான் நிகலாய். “நீங்கள் நகருக்கு வெளியே வசிக்க நேரிடும். அதனால், பாவெலைப் பார்க்க முடியாது போகும். பொதுவாகச் சொன்னால்......”

“பாவெலை இந்தப் பிரிவு ஒன்றுமே பாதிக்காது” என்று பெரு மூச்சுடன் சொன்னாள் அவள். “உண்மையைச் சொல்லப்போனால், எனக்குக்கூட, அவனைச் சந்தித்துவிட்டு வருவது என் இதயத்தையே பிழிந்தெடுப்பது மாதிரி இருக்கிறது. அவர்கள் ஒன்றுமே பேச விடுவதில்லை. சும்மா வெறுமனே போய் முட்டாள்மாதிரி மகனையே பார்த்துக்கொண்டிருப்பதும், நாம் அவனிடம் ஏதாவது பேசிவிடப் போகிறோமோ என்ற பயத்தில் அவர்கள் நம் வாயையே பார்த்துக்கொண்டிருப்பதும்......”

கடந்த சில நாட்களில் நடந்துபோன சம்பவங்களால் அவள் மிகவும் சலித்துவிட்டாள். எனவே நகரத்தின் நாடகம் போன்ற வாழ்வைவிட்டு வெகுதூரம் ஓதுங்கிச் சென்று வாழ்வதற்கு இதுதான் சந்தர்ப்பம் என அவளுக்குத் தோன்றியது. எனவே அதைக் கேட்டவுடன் அவள் ஆசையோடு துள்ளியெழுந்தாள்.

ஆனால் நிகலாயோ பேச்சின் விஷயத்தையே மாற்றிவிட்டான்...

“இவான், நீ என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?” என்று அந்த டாக்டரின் பக்கம் திரும்பிக் கேட்டான் அவன்.

அந்த டாக்டர் தனது குனிந்த தலையை நிமிர்த்தியவாறே சோகத்தோடு பதில் சொன்னார்:

“நம்மோடிருப்பவர்கள் எவ்வளவு குறைந்த தொகையினர் என்பதை நினைத்துப் பார்த்தேன். நாம் இன்னும் மிகுந்த உற்சாகத்தோடு உழைக்க வேண்டும். பாவெலும் அந்திரேயும் உள்ளிருந்து தப்பியோடி வரத்தான் வேண்டும். அதற்கு அவர்களைச் சம்மதிக்கச் செய்யவேண்டும். அவர்களைப் போன்ற உழைப்பாளிகள் உள்ளே சும்மா முடங்கி உட்கார்ந்துகொண்டிருக்கக் கூடாது.”

நிகலாய் முகத்தைச் சுழித்தான். தாயைப் பார்த்தவாறே தலையை ஆட்டினான், தன் முன்னிலையிலேயே தன் மகனைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அவர்களுக்குச் சிரமமாயிருக்கிறது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். எனவே அவள் எழுந்து அந்த அறையை விட்டுத் தன் அறைக்குச் சென்றாள். அவளது மனத்தில் அவர்கள் தன்னுடைய விருப்பத்தை நிராகரித்துத்தான் விட்டார்கள் என்ற வேதனையுணர்ச்சி ஏற்பட்டு அவளை வருத்தியது. அவள் படுக்கையில்