பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

மக்சீம் கார்க்கி


“நான் சௌக்கியம். எல்லோரும் அப்படித்தான்” என்று அமைதியாகச் சொன்னான். “நீ எப்படி இருக்கிறாய்?”

“நானும் சௌக்கியம். இகோர் இவானவிச் இறந்து போனான்” என்று யந்திரம் மாதிரி நிர்விசாரமாய்ச் சொன்னாள் அவள்.

“உண்மையாகவா?” என்று வியந்து கேட்டான் பாவெல். அவன் மெதுவாகத் தன் தலையைத் தொங்கவிட்டான்.

“சவ அடக்கத்தின்போது போலீசார் ஒரு சண்டையைக் கிளப்பிவிட்டார்கள். ஒருவனைக் கைது செய்திருக்கிறார்கள்” என்று பரபரப்பின்றிச் சொன்னாள் அவள். சிறைச்சாலையின் உதவியதிகாரி நாக்கை மிக எரிச்சலோடு சப்புக் கொட்டிக்கொண்டே துள்ளியெழுந்தான்.

“இந்த மாதிரி விஷயங்களைப் பேசக்கூடாது என்று தெரியுமா, இல்லையா?” என்று முணுமுணுத்தான் அவன், “இங்கு அரசியலைப்பற்றிப் பேசக்கூடாது.”

தாயும் எழுந்து நின்று, தனது குரலில் குற்றபாவத்தின் சாயை படரப் பேசினாள்:

“நான் ஒன்றும் அரசியலைப்பற்றிப் பேசவில்லை ; ஒரு சண்டையைப் பற்றித்தான் பேசினேன். அவர்கள் சண்டை போட்டது உண்மை. ஒரு பையனுடைய தலையைக்கூட அவர்கள் நொறுக்கித் தள்ளிவிட்டார்கள்.....”

“எல்லாம் ஒன்றுதான். இனிமேல் பேசாமல்தான் இருக்க வேண்டும். உங்கள் சொந்த விஷயத்தைப்பற்றி அதாவது பொதுவாக உங்கள் வீட்டு விஷயத்தையும் குடும்ப விஷயத்தையும் தவிர வேறு எதையுமே இங்கு பேசக்கூடாது.”

தனது பேச்சு குழம்பிக் குழறி ஒலிப்பதை அவன் கண்டுகொண்டான். அவன் மீண்டும் மேஜையருகே உட்கார்ந்து சில காகிதங்களைப் பரபரவென்று புரட்டத் தொடங்கினான்.

“இந்த மாதிரி நீ ஏதாவது பேசித்தொலைத்தால் அப்புறம் இதற்கு பதில் சொல்ல வேண்டியது நான்தான்” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் அவன்.

அவன்மீது பதிந்துநின்ற கண்களை அகற்றாமலே, தாய் தன் கையிலிருந்த துண்டுச் சீட்டை பாவெலின் கைக்குள் விறுட்டென்று திணித்தாள். அப்புறம் நிவர்த்தி நிறைந்த நிம்மதியுணர்ச்சியோடு பெருமூச்சு விட்டாள்.

“எதைப்பற்றித்தான் - பேசுவது என்பதே எனக்குத் தெரியவில்லை....” என்றாள் தாய்.