பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

393


அந்தப் போலீஸ் தலைவன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஜனங்கள் ஒன்றுகூடி இருண்ட வளையமாக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

“நிகீதா: ஏ. நிகீதா!” என்று கத்தினான் அந்தத் தலைவன்.

கம்பளிக்கோட்டு அணிந்து குட்டையும் குண்டுமாயிருந்த ஒரு முஜீக் கூட்டத்திவிருந்து வெளிவந்தான். அவனது கலைந்துபோன பெரிய தலை கவிழ்ந்து குனிந்திருந்தது.

“நிகீதா!” என்று தன் மீசையை நிதானமாகத் திருகிக்கொண்டே சொன்னான் அந்தப் போலீஸ் தலைவன். “அவன் செவிட்டில், ஓங்கி ஒரு சரியான குத்து விடு!”

அந்த முஜீக் ரீபினின் முன்னால் வந்து நின்று தலையை நிமிர்த்தினான், உடனே ரீபின் அவன் முன் கடுகடுத்த வார்த்தைகளை வீசியபடி உர்த்த உறுதி வாய்ந்த குரலில் சொன்னான்.

“ஜனங்களே! பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்!”

அந்த முஜீக் தன் கையை மெதுவாக உயர்த்தி ரீபினின் தலையில் லேசாக ஒரு குத்துவிட்டான்

“ஏ, நாய்க்குப் பிறந்த பயலே! இப்படித்தான் அடிக்கிறதோ?” என்று அவனை நோக்கி அழுது வடிந்தான் அந்தத் தலைவன்.

“ஏய், நிகீதா!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “கடவுளை மறந்து காரியம் செய்யாதே!”

“நான் சொல்கிறேன். அவனை அடி!” என்று முஜீக்கின் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே கத்தினான். தலைவன். ஆனால் அந்த முஜீக்கோ தன் தலையைக் குனிந்தவாறே ஒரு புறமாக ஒதுங்கிச் சென்றான்.

“என்னால் முடிந்தவரை அடித்தாயிற்று” என்று முனகினான்.

“என்ன?”

“அந்தப் போலீஸ் தலைவனின் முகத்தில் ஒரு நடுக்கம் பரவிப் பாய்ந்தது. அவன் தரையை எட்டி உதைத்தான். ஏதேதோ திட்டிக்கொண்டு ரீபினை நோக்கிப்பாய்ந்தான். திடீரென ஓங்கியறையும் சத்தம் கேட்டது. ரீபின் கிறுகிறுத்துச் சுழன்றான். தன் கையை உயர்த்தினான். ஆனால் இரண்டாவதாக விழுந்த அறை அவனைக் கீழே தள்ளி வீழ்த்தியது. அந்தப் போலீஸ் அதிகாரி கீழே விழுந்த ரீபினின் நெஞ்சிலும் விலாவிலும் தலையிலும் உதைத்தான். மிதித்தான்