பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

மக்சீம் கார்க்கி


நேராக முன்னேறிச் செல்ல முடியும். நான் சொல்வது சரிதானே, அம்மா?”

“சரிதான்” என்றாள் தாய். “நீ சொன்னது சரிதான், கண்ணே, இல்லையென்றால் வாழ்க்கை இப்படியேதான் போய்க்கொண்டிருக்கும். மாறுதலிருக்காது.....”

‘உங்களுக்குக் கணவர் இருக்கிறானா?”

“இல்லை. செத்துப்போனான், ஒரு மகன் இருக்கிறான்.”

“அவன் உங்களோடு வாழவில்லையா?”

“அவன் சிறையிலிருக்கிறான்” என்றாள் தாய்.

இந்த வார்த்தைகளைக் கூறியதுமே, அந்த வார்த்தைகள் அவள் மனத்தில் எழுப்பும் வழக்கமான துயர உணர்ச்சியோடு ஒரு பெருமித உணர்ச்சியும் தோன்றுவதைத் தாய் உணர்ந்தாள்.

“அவனைச் சிறையில் போட்டது இது இரண்டாவது தடவை. கடவுளின் சத்தியத்தை மக்களிடம் பரப்பியதுதான் அவன் சிறை சென்றதற்குக் காரணம். அவன் இளைஞன், அழகன், புத்திசாலி. அவன் தான் உங்களுக்காகப் பத்திரிகை போடவேண்டும் என்று முதன் முதல் நினைத்தவன்; மிகயீல் இவானவிச் அவனைவிட வயதில் இரண்டு மடங்கு மூத்தவன்தான், என்றாலும் மிகயீலை இந்த உண்மையான பாதையில் இழுத்துவிட்டவன் என் மகன்தான். சீக்கிரமே என் மகனுக்குத் தண்டனை கொடுத்து அவனைச் சைபீரியாவுக்கு நாடு கடத்திவிடுவார்கள். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி, திரும்பவும் இங்கு வந்து தன் வேலையைத் தொடர்ந்து நடத்துவான்.....”

அவள் பேசும்போது அவளது உள்ளத்தில் பெருமை உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வளர்ந்தது. அவளது மனத்தில் எழுந்த வீரசொரூபத்தை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் பொங்கிவந்தன. தொண்டை அடைத்தது. அன்றைய தினத்தில் அவள் கண்ணால் கண்ட இருண்ட சம்பவத்தை—அந்த இருளின் அர்த்தமற்ற பயங்கரமும். வெட்ககரமான கொடுமையும் அவளது மூளைக்குள்ளே துடிதுடித்துக்கொண்டிருக்கும் தவிப்பை—சமனப்படுத்துவதற்கு, அவளுக்கு வேறொரு ஒளி மிகுந்த நல்ல விஷயம் தேவைப்பட்டது; எனவே அவள் அப்படிப் பேசினாள். தனது ஆரோக்கியமான ஆத்மாவின் தூண்டுதல்களுக்கெல்லாம் தன்னையுமறியாமல் பணிந்து கொடுத்து தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அந்த விஷயங்களெல்லாம் ஒன்று கலந்து புனிதமும், பிரகாசமும் நிறைந்த ஒரு பெருந் தீப ஒளியாகத்-