பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

421


வழியாகப் படபடத்தது. மெல்லிய மழைத் தூவானம் ஜன்னலின் மீது பெய்து வழிந்தது. தத்யானா அடுப்புக்கு மேலாக இருந்த பரணிலிருந்து சில போர்வைகளை எடுத்து, ஒரு பெஞ்சின் மீது விரித்து. தாய்க்குப் படுக்கை தயார்பண்ணிக் கொடுத்தாள்.

“அவன் ஓர் உற்சாகமான பேர்வழி” என்று கூறினாள் தாய்.

“பெரிய வாயளப்புக்காரன். சத்தம் போடுவதுதான் மிச்சம்.”

“உன் கணவன் எப்படி?” என்று கேட்டாள் தாய்.

“அவன் ஒழுங்கானவன்தான். ஓரளவு நல்லவன்தான். குடிப்பதில்லை. நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். அவனிடம் பலவீனமான குணம்......”

அவள் நிமிர்ந்து நின்றாள்.

“அதற்கு இப்போது நாங்கள் என்ன செய்வது?” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னாள் அவள். “நாங்களெல்லாம் போராடி எழ வேண்டாமா? போராடத்தான் வேண்டும். அதைப்பற்றித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஒவ்வொருவனும் தனக்குத் தானே நினைத்துக்கொள்கிறான். ஆனால், அதை வெளிப்படையாக நினைத்துப் பார்க்கவேண்டும். யாராவது முதலில் துணிந்து காலடி எடுத்து வைக்க வேண்டும்........”

அவள் பெஞ்சின்மீது உட்கார்ந்து தாயைப் பார்த்துக் கேட்டாள்:

“சீமான் வீட்டு வயசுப் பெண்கள்கூட, தொழிலாளிகளோடு கலந்து பழகுவதாகவும், அவர்களுக்குப் பாடம் சொல்வதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வளவுக்கு, அப்படிச் செய்வதற்கு அவர்களால் முடியுமா?. அவர்களுக்குப் பயமாயிருக்காது?”

அவள் தாயின் பதிலைக் கேட்டு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டாள். பிறகு தன் கண்களையும் தலையையும் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசத் தொடங்கினாள்:

“ஏதோ ஒரு புத்தகத்தில் ‘அர்த்தமற்ற வாழ்க்கை’. என்ற அடியைப் படித்தேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது. அந்த மாதிரி வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். அதில் கருத்துக்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தன. எனினும் சம்பந்தா சம்பந்தமற்று, தொடர்பு இல்லாமல் இருக்கின்றன. மேய்ப்பவன் இல்லாத ஆட்டுமந்தை மாதிரி. கட்டி மேய்க்க ஆளில்லாமல் தான் தோன்றியாய்த் திரிகின்றன. அதுதான் அர்த்தமற்ற வாழ்க்கை. என்னால் முடியுமானால், இந்த மாதிரி வாழ்க்கையிலிருந்து திரும்பியே பார்க்காமல் ஓடிவிடுவேன். அதிலும், உண்மை இதுதான்