பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நாம் நேரத்தை வீணில் போக்கக்கூடாது. நீலவ்னா, நாமே முன்னின்று நமது காரியங்களைக் கவனிக்கலாம்.....”

சோகம் நிறைந்த புன்னகையோடு அவள் பக்கமாகச் சென்று அவள் கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கேட்டான்:

“உங்கள் பெட்டி எங்கே?”

“சமையலறையில்.”

“நம் வீட்டு வாசலில் உளவாளிகள் திரிகிறார்கள். அதிலுள்ள அவ்வளவையும் அவர்கள் கண்ணில் படாமல் நாம் வெளியே கொண்டுபோக முடியாது. அவற்றை மறைத்து வைப்பதற்கும் இடமில்லை. இன்று ராத்திரி அவர்கள் மீண்டும் சோதனை போட வருவார்கள் என்றே நினைக்கிறேன். எனவே—எவ்வளவு வருத்தம் தரத்தக்கதாயிருந்தாலும் சரி — நாம் அவற்றைச் சுட்டுப் பொசுக்கிவிட வேண்டியதுதான்.”

“எவற்றை?”

“டிரங்குப் பெட்டியிலிருக்கிறதே —அவற்றை!”

தாய் புரிந்துகொண்டாள். அவள் எவ்வளவுதான் வருத்தங்கொண்டிருந்த போதிலும், தனது காரிய சாதனையை எண்ணி அவள் மனத்தில் ஏற்பட்ட பெருமையுணர்ச்சி புன்னகையாக உருவெடுப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

“அதில் ஒன்றுமே கிடையாது - அதில் ஒரு துண்டுக் கடுதாசிகூடக் கிடையாது!” என்று கூறிவிட்டு, அதன் பின்னர்தான் ஸ்திபான் சுமக்கோவைச் சந்திக்க விவரத்தையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே ஆர்வத்தோடு கேட்டான்; ஆனால் அந்தச் சுழிப்பு சீக்கிரமே மறைந்து, அவன் முகத்தில் வியப்புக் குறி படர்ந்தது... இறுதியில் அவன் உணர்ச்சிப் பரவசமாகி அவள் பேச்சில் குறுக்கிட்டுக் கத்தினான்:

“அபாரம்! மாபெரும் வேலை!”

அவன் அவள் கைகளை இறுகப் பற்றி மெதுவாகச் சொன்னான்:

“உங்களுக்கு ஜனங்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.... உங்களை நான் என் சொந்தத் தாய்போலவே நேசிக்கிறேன்!” அவன் ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உற்சாகமடைகிறான் என்பதைப் புரிய முடியாமல் அவனை வியப்போடு கூர்ந்து நோக்கியவாறே புன்னகை புரிந்தாள் தாய்.