பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

மக்சீம் கார்க்கி


ஏமாற்றுக்காரர்கள் தங்களது சொந்த நீதிமன்றங்களைக்கூட ஓர் ஆபாசக் கேலிக்கூத்தாக மாற்றிவிடுகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே, பீட்டர்ஸ்பர்க்கில் தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது!”

”கவலைப்படாதே நிகலாய் இவானவிச்” என்று உறுதியுடன் கூறினாள் தாய். “நீங்கள் எனக்கு இதை விளக்கவும் வேண்டாம். ஆறுதல் கூறவும் வேண்டாம். பாவெல் சரியான காரியத்தைத்தான் செய்வான். எந்தவிதக் காரணமுமின்றி அவன் தன்னையும் தன் தோழர்களையும் கஷ்டத்துக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டான். அவன் என்னை நேசிக்கிறான். அவன் என்னைப்பற்றி எவ்வளவு கவலைப்படுகிறான் என்பதை நீங்களே அறிவீர்கள். “அவளுக்கு விளக்கிச் சொல்லுங்கள்” என்று சொல்கிறான் அவன், ‘ஆறுதல் கூறுங்கள்’ என்கிறான்.......”

அவளது இதயம் மூர்க்கமாகப் படபடத்தது: உணர்ச்சி வேகத்தால் அவள் கண்கள் இருண்டு மயங்கின.

"உங்கள் மகன் அருமையான பேர்வழி!” என்று இயற்கைக்கு மீறிய உரத்த குரலில் சொன்னான் அவன். “அவன் மீது எனக்கு அபாரமதிப்பு!”

“ரீபினுக்கு உதவுவதற்கு நாம் வேறொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று சொன்னாள் தாய்.

அவள் உடனடியாக ஏதாவது செய்ய விரும்பினால், எங்காவது போக களைத்துப்போய்க் கீழே சாய்கிறவரையிலும் நடந்தே போக விரும்பினாள்.

“நல்லது” என்று கூறிக்கொண்டே அறைக்குள் நடந்தான் நிகலாய். “இப்போது சாஷா நமக்குத் தேவை....”

“அவள் வந்துவிடுவாள். நான் என்றென்றெல்லாம் பாவெலைப் பார்த்துவிட்டு வருகிறேனோ, அன்றெல்லாம் அவள், வந்துவிடுவாள்.”

நிகலாய் சோபாவில் தாய்க்கு அருகே உட்கார்ந்தான். அவன் சிந்தனை வயப்பட்டவனாய்த் தலையைக் குனிந்து உதட்டைக் கடித்து, தாடியைத் திருகிக்கொண்டிருந்தான்.

“இந்தச் சமயத்திலே என் அக்காவும் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.....”

“பாவெல் அங்கிருக்கும்போதே நாம் இந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்டால் நல்லது. அவனும் அதைக் கண்டு சந்தோஷப்படுவான்” என்றாள் தாய்.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள்.