பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

31


அந்தப் பெண்ணின் மேலுடைகளைக் கழற்றுவதற்கு உதவிக்கொண்டே கேட்டான் அந்த ஹஹோல். “குளிராயிருந்ததா?”

“வயல் வெளியில் வரும்போது மகா பயங்கரம்! அந்த ஊதைக் காற்று–அப்பப்பா!”

அவளது குரல் செழுமையும் தெளிவும் பெற்றிருந்தது. வாய் சிறியதாகவும், உதடுகள் பருத்ததாயும் இருந்தன. மொத்தத்தில் உடற்கட்டு உருண்டு திரண்டு புதுமையோடு இருந்தது. மேலுடையைக் களைந்த பிறகு, அவள் தனது சிவந்த கன்னங்களை, குளிரால் நிறைந்த சின்னங்சிறு கரங்களால் தேய்த்துவிட்டுக்கொண்டாள், அதன் பின்னர் செருப்புக் குதிகள் தரையில் மோதி ஓசை செய்ய, அவள் அந்த அறைக்குள்ளே நடமாடிக்கொண்டிருந்தாள்.

“ரப்பர் ஜோடுகள் அணியக் காணோம்” என்று தாய் மனதுக்குள்ளாக நினைத்துக்கொண்டாள்.

“ஆம்”..... என்று நடுங்கிக்கொண்டே இழுத்தாள் அந்த யுவதி. “நான் எவ்வளவு தூரம் விறைத்துப் போனேன் என்பதை உங்களால் கற்பனைக் கூட பண்ண முடியாது!”

“இதோ. உனக்குக் கொஞ்சம் தேநீர் போடுகிறேன்” என்று தாய் சமையலறைக்கு விரைந்தாள். இந்தப் பெண் தனக்கு வெகுகாலமாகத் தெரிந்தவள் போலவும் எனவே தாய்மையின் பரிவோடும் பாசத்தோடும் அவளை நேசிப்பது போலவும் தாய்க்குத் தோன்றியது. அடுத்த அறையில் நடந்துகொண்டிருந்த சம்பாஷணையைக் கேட்கும்போது அவள் தன்னுள் புன்னகை செய்துகொண்டாள்.

“நஹோத்கா[1]! உங்களுக்கு என்ன கவலை” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“பெரிய கவலை ஒன்றுமில்லை” என்று அமைதியுடன் பதில் சொன்னான். அந்த ஹஹோல். “இந்தப் பெரியம்மாவுக்கு நல்ல கண்கள் இருக்கின்றன. எனது அம்மாவுக்கும் இந்த மாதிரித்தான் கண்கள் இருந்திருக்குமோ என்று யோசித்தேன். நான் அடிக்கடி என் தாயைப் பற்றியே நினைக்கிறேன். அவள் இன்னும் உயிரோடிருப்பதாகவே நான் கருதுகிறேன்!”

“உங்கள் தாய் செத்துப்போய்விட்டதாகச் சொல்லவில்லை?”

“ஆனால், என்னுடைய வளர்ப்புத் தாய்தான் செத்துப் போனாள்.

நான் என்னைப் பெற்றெடுத்த தாயைப்பற்றிச் சொல்லுகிறேன்.


  1. அந்திரேய் நஹோத்யா என்பது முழுப்பெயர். அந்திரேய் என்றும் நஹோத்கா என்றும் தனித்தனியே அழைப்பதுமுண்டு–மொ-ர்