பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

475


நச்சுப்பிடித்த சாட்சிகளின் முனகலையெல்லாம் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. அந்தக் கிழ நீதிபதியோ, காற்றடிக்காத திசையில் ஆடாது அசையாது நிற்கும் காற்றாடியைப்போல், இம்மிகூட அசையாது தமது நாற்காலிக்குள்ளேயே புதைந்துகிடந்தார். சுற்றுச்சூழ இருந்த ஜனங்கள் ஆயாசத்தால் அலுத்து மரத்துப்போகும்வரை இவையனைத்தும் நீடித்தன.

“நான் அறிவிக்கிறேன்.....” என்று கூறிக்கொண்டே அந்தக் கிழவர் எழுந்து நின்றார். இந்த வார்த்தைகளுக்குப் பின் வந்த வார்த்தைகள் - அவரது உதடுகளுக்குள்ளாகவே மடிந்து உள்வாங்கிப் போய்விட்டன.

நீதிமன்றம் முழுவதிலும் பெருமூச்சுக்களும், அமைதியான வியப்புக் கேள்விகளும், இருமலும், காலைத் தேய்க்கும் சப்தமுமே நிறைந்து ஒலித்தன, கைதிகளை வெளியே கொண்டுபோனார்கள். அவர்கள், தமது நண்பர்களையும் உறவிளர்களையும் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே புன்னகை புரிந்தார்கள். இவான்கூலெவ் யாரையோ துணிந்து வாய்விட்டுக் கூப்பிட்டுவிட்டான்:

“இகோர், தைரியத்தை இழக்காதே!”

தாயும் சிஸோவும் நீதிமன்றத்துக்கு வெளியேயுள்ள வராந்தாவுக்கு வந்தார்கள்.

“பக்கத்துக் கடையிலே போய் ஒரு கப் தேநீர் சாப்பிடலாமா?” என்று சிஸோவ் அன்போடு கேட்டான், “இன்னும் நமக்கு ஒன்றரை மணி நேர அவகாசம் இருக்கிறது.”

“எனக்கு இப்போது தேநீர் தேவையில்லை.”

“எனக்கும்தான் தேவை இல்லை, அந்தப் பையன்களைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? இவ்வுலகத்திலேயே அவர்கள் மட்டும்தான்” இருப்பது போலல்லவா. அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்? மற்றவர்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அந்த பியோதரைப் பார்!”

சமோய்லவின் தந்தை அவர்கள் அருகில், தொப்பியைக் கையில் பிடித்தவாறே, வந்து சேர்ந்தான்.

“என். கிரிகோரியைப் பார்த்தீர்களா?” என்று கசந்த புன்னகையோடு கூறினான் அவன், “அவன் எதிர்வாதம் செய்யவும் மறுத்துவிட்டான், அவர்களோடு பேசவே அவன் விரும்பவில்லை, முதன்முதல் அவனுக்குத்தான் இந்த யோசனை எட்டியிருக்கிறது. பெலகேயா, உன் மகனோ வக்கீல்களைவைத்து நடத்திப் பார்ப்பதற்குச் சம்மதித்திருக்கிறான். இவனோ எதற்கும் முண்டியதில்லை. அதன் பிறகு நாலுபேர் இவனைப்போலவே மறுத்துவிட்டார்கள்.”