பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

மக்சீம் கார்க்கி


சிவந்துபோயிருந்தது. அவன் தன் கைகளை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான்:

“கொலையானாலும் திருட்டானாலும் குற்றவாளிகளைப் பொது மக்களின் ஜூரிகளைக்கொண்டு விசாரிக்கிறார்கள். அந்த ஜூரிகளில் விவசாயிகளும், நகர மாந்தர்களும், தொழிலாளர்களும் உண்டு. ஆனால், ஜனங்கள் அதிகாரிகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும், அவர்களை விசாரிப்பது பொது மக்களின் ஜூரிகளல்ல; அதிகாரிகளே அவர்களைப் பிடித்து விசாரிக்கிறார்கள்! இதை என்ன சொல்கிறாய்? நீ என்னை அவமானப்படுத்தினாய் என்று வைத்துக்கொள். நான் உன் தாடையில் ஓங்கியறைகிறேன். அப்புறம் நீ என்மீது தீர்ப்புக் கூறுகிறாய்: நீ என்ன கூறுவாய்? என்னைத்தான் குற்றவாளி என்பாய். ஆனால் முதன்முதலில் தவறு செய்தது யார்? நீ தான். அதுபோல்........”

நரைத்த தலையும் கொக்கி மூக்கும் கொண்ட ஒரு காவலாளி மார்பகலத்துக்குப் பற்பல மெடல்களை மாட்டிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவன் ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தான். புகினின் சகோதரனைப் பார்த்து, விரலால் சுட்டிக்காட்டிப் பத்திரம் என்றான்.

“கூச்சலை நிறுத்து. இது ஒன்றும் கள்ளுக்கடை இல்லை!” என்றான் அவன்.

“அது சரிதான், பெரியவரே, எனக்குத் தெரியும். ஆனால் நான் உங்களை அடித்துவிட்டு, பிறகு நானே நீதிபதியாகவும் மாறினால், அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.,...?”

“உன்னை இங்கிருந்து கல்தா கொடுத்து வெளியில் தள்ளத்தான் நான் நினைக்கிறேன். தெரிந்ததா?” என்று கடுமையாகச் சொன்னான் அந்தக் காவலாளி.

“என்னை. வெளியே தள்ளப் போகிறாயா? எதற்காக?”

“இந்தமாதிரிக் காட்டுக் கூச்சல் போடுவதற்காக! உன்னைத் தெருவில் கொண்டுபோய்த் தள்ளிவிடுவேன்!”

மூத்த புகின் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் பார்த்தான். பிறகு தணிந்த குரலில் சொன்னான்!

“அவர்கள் விரும்புவதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். ஜனங்கள் வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்!.....”

“ஆமாம். நீ என்ன நினைத்தாய்?” என்று அந்தக் கிழவன் கரகரத்த குரலில் கேட்டான்.

மூத்த புகின் தோள்களைக் குலுக்கிவிட்டுக்கொண்டு மிகவும் மெதுவாகப் பேசத் தொடங்கினான்.